முருக பக்தர்கள் மாநாடு வெற்றிகரமாக நடத்த விளம்பரம் தேடித் தந்த திருமாவளவன், சேகர் பாபு, வைகோவிற்கு பாராட்டுக்கள் - காடேஸ்வரா சுப்பிரமணியம் பெருமிதம்!

மதுரையில் இந்து முன்னணி சார்பில் நடத்தப்பட்டு வரும் முருக பக்தர்கள் மாநாட்டில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் ஆர்.பி., உதயகுமார், செல்லூர் ராஜூ, ராஜன் செல்லப்பா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
லட்சக்கணக்கான ஹிந்து மக்கள் திரண்ட இந்த மாநாட்டின் தலைமை உரையை இந்து முன்னணி அமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வர சுப்ரமணியன் ஆற்றினார். அவர் பேசியதாவது; இந்த மாநாடு நடக்கக் கூடாது என்று ஒரு கோஷ்டி இருக்கிறது. நமது மாநிலத்தின் இந்து அறநிலையத்துறை அமைச்சர் ஒருவர் விரதம் இருப்பதாக சொன்னார்கள். எதற்கு விரதம் என்றால், இந்த மாநாட்டுக்கு கூட்டம் வரக் கூடாது என்று வேண்டி விரதம் இருக்கிறாராம். அப்படியாவது, முருகன் மீது நம்பிக்கை இருக்கிறது என்று பெருமைப்படுவோம்.
நமக்கு இந்த மாநாட்டிற்கு எப்படி விளம்பரம் செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்த போது, அதிகளவில் விளம்பரம் தேடி தந்த திருமாவளவன், வைகோ, சேகர்பாபு ஆகியோர் நல்ல விளம்பரம் தேடிக் கொடுத்துள்ளனர். விளம்பரம் தேடிக் கொடுத்த அமைச்சர் சேகர்பாபுக்கு பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறோம்.
இந்த மாநாடு எதுக்கு என்று அமைச்சர் சேகர்பாபு கேட்கிறார். அதன் பிறகு, ரூ.400 கோடியில் மாநாடு நடத்துவதாக தெரிவித்துள்ளார். மாநாடு நடத்தினால், அந்த ரூ.400 கோடி எப்படி வந்தது என்று கணக்கு சொல்ல வேண்டும். உங்கள் அப்பா வீட்டு பணமா? உங்கள் முதல்வர் வீட்டில் இருந்து கொடுத்த பணமா? கோவில் பணமா? என்பதை கணக்கு கொடுக்க வேண்டும். இந்த மாநாடு நடத்துவதற்கான கணக்கை கொடுக்கத் தயாராக இருக்கிறோம்.
இந்த மாநாடு நடக்கக் கூடாது என்பதற்காக, இங்கு வேலை செய்ய எவ்வளவு தடைகள் இருந்தது. எப்படி சென்னிமலையை கிறிஸ்துவ மலையாக மாற்றுவோம் என்று சொன்னார்களோ, அப்பவே முருகருக்கு கோபம் வந்து விட்டது. தமிழகத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று, சென்னிமலையிலேயே ஆரம்பித்து திருப்பரங்குன்றத்தில் நம்மை வரவிடாமல் போலீஸார் முயற்சித்தனர். ஆனால், முருக பக்தர்கள் அதை எல்லாம் உடைத்தனர். நீதிமன்றத்தில் நீதி வென்றது. ஒரு மணிநேரத்தில் 50 ஆயிரம் மக்கள் ஓரிடத்தில் திரண்டனர். திருப்பரங்குன்றத்தில் எப்படி கூட்டத்தை சேர்த்தார்கள் என்று போலீசாரும், அமைச்சர்களும் ஆலோசனை நடத்துகிறார்கள்.
அதேபோலத்தான் இந்த மாநாட்டுக்கு நீதிமன்றம் சென்று நீதியை வென்றெடுத்தோம். தற்போது, கடலா? கடல் அலையா? என்பதைப் போல கூட்டம் கூடியுள்ளது. அரசியல் இல்லாத மாநாடு இது. அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்தோம். அ.தி.மு.க., சார்பில் செல்லூர் ராஜூ, ஆர்.பி., உதயகுமார் ஆகியோர் வந்துள்ளனர். இப்படி பல்வேறு கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தோம். மாநாட்டு அழைப்பிதழை கொடுப்பதற்காக, முதல்வருக்கு ஒரு கடிதம் எழுதினோம். ஆனால், இப்போது வரைக்கும் எந்த பதிலும் வரவில்லை. சனாதனத்தை பற்றி யாராவது தவறாக பேசினால், சன்னியாசிகள் ஒன்றாக சேர வேண்டும். அவர்களுக்கு பின்னால் இந்து முன்னணி இருக்கும், என்றார்.