ஆவணி அமாவாசையில் தவிர்க்க வேண்டியவை..!
1. அசைவத்தை தவிர்க்க வேண்டும் :
அமாவாசை நாளில் பித்ருக்கள் நம்முடைய வீட்டிற்கு வருவதாக ஐதீகம். அதனால் அன்று உடல், மனம் ஆகியவை சுத்தமாக இருக்க வேண்டும். இந்த நாளில் அசைவம், முட்டை, மீன், மது போன்றவற்றை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இது முன்னோர்களின் ஆத்மாக்களை அவமதிப்பதற்கு சமமானதாகும். இதனால் சைவ உணவுகளையே சமைத்து, முன்னோர்களுக்கு படைத்து, நாமும் சாப்பிட வேண்டும். இதனால் அவர்களின் ஆசிகளை பெற முடியும்.
2. தர்ப்பணத்தை தவிர்ப்பது:
இந்த நாளில் சிரார்த்தம், தர்ப்பணம் ஆகிய சடங்குகளை தவிர்க்கவோ, அலட்சியம் செய்யவோ கூடாது. இது மிகவும் தீமையான விளைவுகளை ஏற்படுத்தும். முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய பித்ரு காரியங்களை தவிர்ப்பதால் வாழ்க்கையில் தடைகள் ஏற்படும். பெரிதாக பூஜைகள் செய்து வழிபட முடியா விட்டாலும், அந்தணர்களை வைத்து தர்ப்பணம் கொடுக்க முடியா விட்டாலும், எளிமையாக வீட்டிலேயே எள்ளும், தண்ணீரும் இரைத்து வழிபட வேண்டும்.
3. முக்கிய முடிவுகளை தவிர்க்கவும் :
முக்கிய முடிவுகள் எடுப்பது, மங்கள பொருட்கள் வாங்குவது ஆகியவற்றை அமாவாசை நாளில் தவிர்க்க வேண்டும். தங்கம், வெள்ளி போன்ற விலை உயர்ந்த பொருட்கள், ஆடம்பர பொருட்கள், ருத்ராட்சம், யந்திரம் போன்ற பூஜை பொருட்கள் ஆகியவற்றை வாங்குவதை தவிர்க்க வேண்டும். இந்த நாளில் புதிய விஷயங்களை துவங்குவதும், முக்கிய முடிவுகள் எடுப்பதும் அபசகுனமாக கருதப்படுகிறது.
4. சாப்பிடக் கூடாத உணவுகள் :
அமாவாசை அன்று கொடைக்கடலை, கீரை, பார்லி, முள்ளங்கி, சுரைக்காய், வெள்ளரிக்காய், பழைய உணவுகள், பாகற்காய் போன்ற உணவுகளை சாப்பிடுவதையும், சமைப்பதையும் தவிர்க்க வேண்டும். இது முன்னோர்களின் ஆன்மாக்களை அவமதிப்பது போல் ஆகி விடும். இந்துக்களின் நம்பிக்கைகளின் படி இந்த உணவுகளை அமாவாசையில் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
5. முடி வெட்டக் கூடாது :
அமாவாசை அன்று ஆன்மிக சுத்தம், முன்னோர்களின் மரியாதை ஆகியவற்றை பாதுகாப்பது மிக அவசியம். அதனால் இந்த நாளில் நகம் வெட்டுவது, முடி வெட்டுவது, நம்மை அழகுப்படுத்திக் கொள்ளும் செயல்களில் ஈடுபடுவத ஆகியன எதிர்மறை ஆற்றல்களை ஈர்ப்பதுடன், பித்ரு தோஷத்திற்கு ஆளாக்கி விடும்.
6. எண்ணெய் தேய்க்கக் கூடாது :
அமாவாசை அன்று தலைக்கு எண்ணெய் தேய்ப்பதையும், எண்ணெய் தேய்த்து குளிப்பதையும் தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக எண்ணெய் தானம் செய்யலாம். இது பித்ரு தோஷத்துடன் சனி தோஷத்தையும் போக்கும். நன்மைகளை தரும். இது முன்னோர்களை வழிபடுவதற்கு உரிய நாள் என்பதால் மற்றவற்றில் கவனம் செலுத்தாமல் முன்னோர்களை வழிபட்டு, அவர்களின் ஆசிகளை பெற முயற்சி செய்ய வேண்டும்.
7. வாங்க கூடாதவை :
அமாவாசை நாள் முன்னோர்களுக்கு சனி பகவானுக்கும் உரிய நாளாகும். அதனால் இந்த நாளில் நேர்மறை ஆற்றல்களை ஈர்க்கும் விஷயங்களை மட்டுமே செய்ய வேண்டும். இந்த நாளில் துடைப்பம் வாங்குவதை தவிர்க்க வேண்டும். இது மகாலட்சுமியின் கோபத்தை தூண்டக் கூடியதாகும். அதே போல் இந்த நாளில் கோதுமை வாங்குவதையும் தவிர்க்க வேண்டும். இந்த நாளில் வாங்கப்படும் பொருட்கள் நேரடியாக முன்னோர்களை சென்று சேரும் என்பதால் இது முன்னோர்களின் கோபத்திற்கும், சாபத்திற்கும் ஆளாக்கி விடும்.