1. Home
  2. தமிழ்நாடு

ராமதாஸ் முடிவை விமர்சித்த திலகபாமா கட்சியில் இருந்து வெளியேற வேண்டும் - பொதுச்செயலாளர் கண்டனம்..!

Q

பா.ம.க.,வில் அன்புமணியை தலைவர் பொறுப்பில் இருந்து மாற்றி செயல் தலைவராக நிறுவனர் ராமதாஸ் அறிவித்தார். தலைவர் பொறுப்பை நானே ஏற்றுக் கொள்கிறேன் என்றும் அவர் கூறி இருந்தார்.
இந்த விவாகாரம் தொடர்பாக ராமதாஸ், அன்புமணி இடையே முரண்பாடு, உட்கட்சி மோதல் என்று செய்திகள் வெளியாகின. அதே நேரத்தில் பா.ம.க.,வில் ஜனநாயகம் கொலை செய்யப்பட்டு உள்ளது, ராமதாஸ் முடிவு தவறு என்று பொருளாளர் திலகபாமா விமர்சித்து இருந்தார்.
அவரின் இந்த விமர்சனத்துக்கு உட்கட்யில் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. அவர் கட்சியின் எந்த போராட்டங்களிலும் கலந்து கொள்ளாதவர், நோய் கிருமி என்று பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் கண்டித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை;
பா.ம.க,,வின் பொருளாளராக இருக்கும் திலகபாமா சிறிதும் பொருளற்ற முறையில் சிறுபிள்ளைத் தனமாக ராமதாஸ் மீது குற்றம் சாட்டியிருக்கிறார். திலகபாமா கட்சிக்கு நேற்று வந்தவர். பா.ம.க.,வின் கொள்கை கோட்பாடுகள் பற்றி அவருக்கு ஒன்றும் தெரியாது.
கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சி மேற்கொண்ட போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள், மாநாடுகள், பொதுக்கூட்டங்கள் எதிலும் கலந்து கொள்ளாதவர். திலகபாமா பாட்டாளி மக்களின் தோழர் அல்லர். மேட்டுக்குடியினம். பெண்களுக்குத் தலைமையில், அதுவும் பொருளாளர் பொறுப்பு வழங்க வேண்டும் என்று ராமதாஸ் பரிந்துரையிலும், ஆதரவிலும் பதவி பெற்றவர்.
பல மாவட்டங்களில் பல ஆண்டுகளாக பாடுபட்டு வந்த பாட்டாளி சொந்தங்களை விரட்டி அடித்தவர். உடனிருந்தே கொல்லும் நோய் இவர். அரசியல் என்னவென்றே தெரியாத அரைவேக்காடு இவர். பாட்டாளிகளின் உயிரியக்கமான பா.ம.க.,வை அழிப்பதற்காக வெளியில் இருந்து கட்சிக்குள் புகுந்த நோய்க்கிருமி.
தமிழகத்திலேயே - ஏன், இந்தியாவிலேயே ஜனநாயகப் பண்புள்ள ஒரே கட்சி பா.ம.க. ஜனநாயக மரபுகளையும், சமூக நீதிக் கோட்பாட்டினையும் கட்சிக்குள்ளே பேணிக் காத்து வரும் ஒரே தலைவர் வழிகாட்டி ராமதாஸ். அரசியல் கட்சிகள் கடந்து அனைவராலும் பாராட்டப்பெறும் ஒரே தலைவர். அவர் விடுக்கும் அறிக்கைகளே அனைவருக்கும் அரசியல் அகரமுதலி.
அவரை ஜனநாயகப் படுகொலை செய்தவர் என்று நெஞ்சிலே வஞ்சக எண்ணத்தோடு சொற்களை அள்ளி வீசிய திலகபாமாவை வன்மையாகக் கண்டிக்கிறேன். கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறேன். பல்வேறு மாநில பொறுப்புகளை ஏற்றுப் பணியாற்றி வந்த நான் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து வருகிறேன்.
நெஞ்சிலே கொஞ்சமும் நன்றியுணர்ச்சி இன்றி ராமதாஸை வசை பாடி இருக்கும் திலகபாமா உடனடியாக கட்சியிலிருந்து வெளியேறி விடுவது தான் அவருக்கு நல்லது. கருணாநிதி போன்றவர்களே தைலாபுரத்திலிருந்து எப்போது தைலம் வரும் என்று காத்திருக்கையில், நேற்று முளைத்த காளான்கள் வசை பாடுவது தான் அவலம்.
மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அரசுகள் எதுவாயினும், கூட்டணி கட்சியே என்றாலும் ஆட்சியாளரின் தவறான போக்குகளையும், ஆட்சியின் குறைபாடுகளையும் ஏமரா மன்னனை இடித்துரைக்கும் சான்றோனாக விளங்கி வரும் ராமதாஸை, நேற்றுக் கட்சிக்குள் வந்த திலகபாமா வசைபாடி மகிழ்வதை விடுத்து, தான் கூறியவற்றைத் திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும். அப்படியே கட்சியிலிருந்து வெளியேறிவிட வேண்டும் என்று அறிவுறுத்துகிறேன்.
இவ்வாறு அறிக்கையில் கூறி உள்ளார்.

Trending News

Latest News

You May Like