பாஜகவின் வாக்கு சதவீதம் கூடியதாக சொல்கிறார்கள்... இல்லவே இல்லை தெளிவாகச் சொல்கிறேன் - எடப்பாடி பழனிசாமி!
தமிழகத்தில் தனித்து நின்று ஆட்சியை அமைத்த ஒரே கட்சி அதிமுக தான். மக்களவை தேர்தலில் பெரிய கூட்டணி இல்லாமல் 20.50% வாக்குகள் பெற்றோம். பெரிய கூட்டணி அமைத்த திமுக 26.5% வாக்குகளையே பெற்றது. 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் கொடுத்து பச்சை பொய் சொல்லி மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த கட்சி திமுக தான். 2021 தேர்தலில் வெறும் 1.98 லட்சம் வாக்குகளால் தான் வெற்றி வாய்ப்பு பறிபோனது. பெரிய வாக்கு வித்தியாசத்தில் ஒன்றும் திமுக வெற்றி பெறவில்லை.
நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவின் வாக்கு சதவீதம் கூடியதாக சில இடங்களில் சொல்கிறார்கள். இல்லை, தெளிவாகச் சொல்கிறேன். 2014-ஐ ஒப்பிடும் போது வாக்கு சதவீதம் குறைந்து தான் உள்ளது. 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 18.80% ஓட்டு வாங்கியது. தற்போது 2024ல் 18.28% வாக்குகளை பெற்று அரை சதம் குறைவாக ஓட்டுகளைத்தான் வாங்கியுள்ளது. 2014 ஆம் ஆண்டு 8 தொகுதியில் போட்டியிட்ட பாஜகவின் வாக்கு சதவீதம் 5.56%. 2024ல் அக்கட்சி 13.15% வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும். ஆனால், தற்போது 20 தொகுதிகளில் போட்டியிட்டு, 11.24% வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. அப்படியென்றால் பாஜக 1.91% குறைவான வாக்குகளை பெற்றுள்ளது. பாஜக கூட்டணியைவிட அதிமுக 1% கூடுதலாக ஓட்டுகளை வாங்கியுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் சூறாவளியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மக்களை சந்தித்து இந்த ஆட்சியின் அவலங்களை எடுத்துச் சொல்வேன். அதேபோல், மக்கள் அனைவரும் எதிர்பார்க்கும் கூட்டணி, நிர்வாகிகள் விரும்பும் கூட்டணி நிச்சயமாக அமையும். இதே தான் நாடாளுமன்ற தேர்தலில் கூறினேன் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் நாடாளுமன்ற தேர்தல் வேறு, சட்டமன்ற தேர்தல் வேறு. இது நம்முடைய தேர்தல்.
கூட்டணி என்பது, தேர்தலுக்கு தேர்தல் மாறும். அதிமுகவின் கொள்கை நிலையானது. இந்தியாவிலேயே உண்மையான உறுப்பினர்கள் கொண்ட ஒரே கட்சி அதிமுகதான். உறுப்பினர்கள் அட்டைகளை வீடு வீடாக சென்று அளித்த ஒரே கட்சி அதிமுக மட்டும் தான். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.