என்னை மிரட்டுகிறார்கள்... இயக்குநர் சீனு ராமசாமி பரபரப்பு புகார்!

தன்னை சிலர் ஆபாசமாக திட்டுவதாகவும், மிரட்டுவதாகவும் பிரபல திரைப்பட இயக்குநர் சீனு ராமசாமி பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய்சேதுபதியை தென்மேற்கு பருவக் காற்று படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகம் செய்தவர் இயக்குநர் சீனு ராமசாமி. இந்த நிலையில், அவர் தமது ட்விட்டர் பக்கத்தில் "எனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக உணர்கிறேன். முதல்வர் அய்யா உதவ வேண்டும் அவசரம்." என பதிவு செய்து இருந்தார்.
இதனை கண்ட தமிழ் திரையுலகினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து, தகவல் அறிந்த காவல்துறையினர் இயக்குநர் சீனு ராமசாமி வீட்டுக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, சென்னையில் உள்ள தனது இல்லத்தில் இயக்குநர் சீனுராமசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்வியல் படமான 800-ல் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க நடிக்க வேண்டாம் என்று பலரும் கூறினார்கள். அப்படி நடித்தால் தமிழர்களின் விரோதத்தை எதிர்கொள்ள நேரிடும் என நானும் விஜய் சேதுபதிக்கு சொன்னேன்.
இதனால், எனக்கு வாட்ஸ் அப் மற்றும் போன் மூலம் தொடர்ந்து மிரட்டல் வருகின்றன. மேலும், சமூக வலைதளங்களில் ஆபாசமாக வசைபாடியுள்ளனர். இது போல விஜய் சேதுபதி ரசிகர்கள் செய்பவர்கள் அல்ல. எனவே, இது தொடர்பாக காவல்துறையினரிடம் புகார் தெரிவிக்க உள்ளேன் என விளக்கம் அளித்தார்.
"அதனால் தான் இந்த மிரட்டல்களை முதல்வர் கவனத்துக்கு உடனே கொண்டு செல்ல விரும்பினேன்" என்றும் சீனு ராமசாமி தெரிவித்தார்.