மாறி மாறி காலில் விழ வைத்து தாக்கினர்.. இப்படியொரு கொடுமையா ! - போலீசார் அதிரடி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள ஓலைகுளம் கிராமத்தில் பால்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். தலித் சமூகத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட ஆடுகள் வைத்து ஆடுமேய்ச்சல் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.
அதே கிராமத்தில் வசித்து வரும் வேறு சமூகத்தைச் சேர்ந்த சிவசங்கு என்பவரும் ஆடு மேய்ச்சலில் ஈடுபட்டு வருகிறார். கடந்த 8ஆம் தேதி பால்ராஜ் ஆடு மேய்த்துக் கொண்டிருக்கும்போது, அவருடைய ஆடு எதிர்பாராதவிதமாக சிவசங்கு ஆடு மேய்த்துக்கொண்டிருந்த பகுதிக்கு சென்றதாக தெரிகிறது.
இதனால் சிவசங்கு பால்ராஜை பிடித்து இழுத்து மிரட்டியதாக கூறப்படுகிறது. மேலும் பால்ராஜை சிவசங்கு தாக்கி, சாதி குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. பின்னர் அருகில் இருந்தவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர். ‘
ஆனால் சிறிது நேரத்தில் சிவசங்கு மற்றும் அவரது உறவினர்கள் சிலர் பால்ராஜ் ஆடு மேய்த்துக் கொண்டிருக்கும் பகுதிக்கு வந்து, தகராறில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பால்ராஜை காலில் விழ வைத்து அவமானப்படுத்தியுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இது குறித்து கேள்விப்பட்டதும் பால்ராஜ் மகன் கருப்பசாமி சம்பவ இடத்திற்கு சென்றப்போது, சிவசங்கு மற்றும் அவரது உறவினர்கள் கருப்பசாமியையும் தாக்கியுள்ளனர். இது குறித்து காவல்துறையில் புகார் அளித்தால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளனர்.
எனினும் தனக்கு நேர்ந்த கொடூரம் குறித்து பால்ராஜ் போலீசில் புகார் அளித்தார். மேலும், சிவசங்கு, அவரின் மகன், மகள் ஆகியோர் தன்னை மாறி மாறி அடித்து காலில் விழவைத்ததாகவும் பால்ராஜ் குற்றம் சாட்டிஉள்ளார்.
அதன்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் அவை தொடர்பான வீடியோவும் கிடைத்துள்ளது. இதனையடுத்து வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்து சிவசங்கு, சங்கிலி பாண்டியன், பெரிய மாரி, வீரய்யா, மகேந்திரன், மகாராஜன் உள்ளிட்ட 7 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறனர்.
newstm.in