இந்த 2 காரணங்கள் தான் தற்போதைய தங்கம் விலை உயர்வுக்கு முக்கிய காரணம்..!
தங்கம்.. நம் நாட்டில் தினமும் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தை நிலவரம் உள்பட பல்வேறு காரணிகளை பொறுத்து தங்கத்தின் விலை என்பது நாள்தோறும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. கடந்த ஜூலை மாதம் தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு குறைத்தது. இதனால் தங்கத்தின் விலை மளமளவென சரிந்தது.
ஆனாலும் அதன்பிறகு மீண்டும் தங்கம் விலை உயர்ந்து ஒரு சவரன் ரூ.60 ஆயிரத்தை நெருங்கியது. இதற்கிடையே தான் அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வென்ற பிறகு தங்கத்தின் விலை மீண்டும் சரிய தொடங்கியது.
இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 75 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் தங்கம் ரூ. 7,300-க்கும் சவரனுக்கு 600 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ரூ. 58,400-க்கும் விற்பனையாகிறது.
கடந்த 6நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு 2,920 ரூபாய் வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
22-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,800
21-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,160
20-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,920
19-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,520
18-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,960
தங்கத்தின் இந்த திடீர் விலை உயர்வுக்கு பின்னணியில் 2 முக்கிய காரணங்கள் உள்ளன. அதாவது மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றமும், ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் தீவிரமடைந்தது தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. போர் நடவடிக்கையை தொடங்கி உள்ள இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. அதேபோல் ரஷ்யா மீது தங்களின் ஏவுகணையை வைத்து தாக்குதல் நடத்த அமெரிக்கா ஒப்புதல் வழங்கி உள்ளது. உக்ரைனும் அமெரிக்காவின் ஏவுகணையை வைத்து ரஷ்யாவை தாக்கி உள்ளது. இதற்கு ரஷ்யாவும் பதிலடி கொடுக்கிறது. இதனால் இஸ்ரேல் - காசா போர் மற்றும் ரஷ்யா - உக்ரைன் போர் தீவிரமாகி உள்ளது.
பொதுவாக இருநாடுகள் இடையேயான மோதல், போர் உள்ளிட்ட காரணங்களின்போது சர்வதேச அளவில் பெரிய பெரிய முதலீட்டாளர்கள் தங்களுக்கு பாதுகாப்பான துறையில் முதலீடு செய்வார். அந்த வகையில் தான் தற்போது முதலீட்டாளர்கள் வெளிநாடுகளில் தங்கத்தை நோக்கி முதலீடு செய்கின்றனர்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வென்ற பிறகு விலை குறைந்தது. இதற்கு முக்கிய காரணம் டொனால்ட் டிரம்ப் போர் நடவடிக்கையை நிறுத்துவதாக கூறியிருந்தது தான். ஆனால் தற்போது அமெரிக்க அதிபராக உள்ள ஜோ பைடன் ரஷ்யா மீது தங்களின் ராணுவ தளவாடங்களை வைத்து தாக்குதல் நடத்த அனுமதி வழங்கி உள்ளார். இது சர்வதேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அதேபோல் தனக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்தாலும் கூட தனது நாட்டின் பாதுகாப்பு கருதி மேற்கொண்டு வரும் போர் நடவடிக்கையில் இருந்து பின்வாங்காது என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறியுள்ளார்.
இந்த 2 காரணங்களும் தான் தற்போதைய தங்கம் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக உள்ளது