இன்னும் டைம் இருக்கு..! உடனே வருமான வரி தாக்கல் செய்யுங்க..!
ஆண்டுதோறும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டியது அவசியம். இதன்படி நடப்பு மதிப்பீட்டு ஆண்டுக்கான (2025-26) வருமான வரி கணக்கு தாக்கலுக்கு ஜுலை 15-ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது.
பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று பின்னர் இந்த அவகாசம் செப்டம்பர் 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. குறிப்பிட்ட கால அவகாசத்துக்கு பிறகு வருமான வரி கணக்கு தாக்கல் செய்தால் அதற்கு அபராதம் விதிக்கப்படும். இதன் காரணமாக, கடைசி நாளான நேற்று நாடு முழுவதும் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் தங்களின் கணக்கை ஆன்லைனில் தாக்கல் செய்ய முயன்றதால் இதற்கான இணையதளம் முடங்கியது.
இதனால் வருமான வரி தாக்கல் செய்ய முயன்றவர்கள், தங்களது கோப்புகளை சமர்பிக்க முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். தங்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு, வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
அவர்களது இந்த கோரிக்கையை ஏற்று, இதற்கான கால அவகாசம் இன்று ஒரு நாள் மட்டும் (செப்டம்பர் 16) நீட்டிக்கப்படுவதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளளது.
"நடப்பு மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் ஏற்கெனவே செப்டம்பர் 15-ம் தேதி வரை நீ்ட்டிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த அவகாசம் மேலும் ஒரு நாள் அதாவது இன்று வரை (செப்.16) நீட்டிக்கப்படுகிறது" என்று தனது அதிகாரப்பூர்வ எக்ல் வலைதள பக்கத்தில் வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.
"நாடு முழுவதும் நேற்று வரை 7 கோடி பேருக்கும் மேற்பட்டோர் தங்களது வருமான வரியை தாக்கல் செய்துள்ளனர். இந்த மைல்கல்லை அடைய காரணமான வரி செலுத்துவோருக்கும், அவர்களுக்கு உதவியாக இருக்கும் கணக்கர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்" என்றும் வருமான வரித் துறை தமது மற்றொரு பதிவில் கூறியுள்ளது