திமுக ஆட்சியில் யாருக்கும் எங்கும் பாதுகாப்பு என்பதே இல்லை - எடப்பாடி பழனிசாமி..!
தமிழகத்தில் ஜூன் மாதம் நடந்த கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள், பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை உள்ளிட்ட சம்பவங்கள் பதற வைத்தன. இதனை முன்வைத்து சட்டம் – ஒழுங்கு சரியில்லை என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால், தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சிறப்பாக உள்ளது என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. அதே சமயம் குற்றங்களைக் குறைக்க தமிழக காவல் துறை அதிரடி நடவடிக்கைகளை கையாண்டு வருகிறது. இந்த நிலையில் கடலூரைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் நவநீதம் நகரைச் சேர்ந்த பக்தா என்ற பத்மநாதன் அதிமுகவில் வார்டு செயலாளராக இருந்தார். பெயிண்டராகவும் பணியாற்றி வந்தார். புதுச்சேரி மாநில எல்லையான திருப்பனாம் பாக்கம் பகுதியில் நடந்த கலைநிகழ்ச்சியை பார்த்துவிட்டு இன்று அதிகாலை வீடு திரும்பிக் கொண்டு இருந்த பத்மநாதனை பின் தொடர்ந்து சென்ற மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடினர். தகவல் அறிந்து வந்த காவல் துறையினர், பத்மநாதன் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சூழலில் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
கடலூர் நவநீதம் நகர் பகுதியைச் சேர்ந்த கழக வார்டு செயலாளர் பத்மநாதன் இரு சக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்தபோது மர்மபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார் என்ற சம்பவம் கேட்டு மிகுந்த அதிர்ச்சியுற்றேன். பத்மநாதன் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்வதுடன் அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
திமுக ஆட்சியில் யாருக்கும், எங்கும் பாதுகாப்பு என்பதே இல்லை. அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து கொலை செய்யப்படும் சூழலில், இதனைத் தடுக்க திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதற்கு பதிலாக கணக்குக்கு சில கைதுகளைக் காட்டி, அதனை விளம்பரமும் செய்து, தனது வழக்கமான கண்துடைப்பு நடவடிக்கைகளால் அரசியல் கொலைகளை கடந்துவிட நினைக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எனது கடும் கண்டனம். பத்மநாதன் கொலையில் தொடர்புள்ள அனைவரையும் துரிதமாக கைது செய்து, உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.