1. Home
  2. தமிழ்நாடு

தமிழ்நாட்டில் ஆளுநர் மாற்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை - ராம சீனிவாசன்..!

1

ஆர்.என்.ரவி கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழ்நாட்டின் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார். அது முதல் ஆளுநருக்கும் ஆளும் திமுக அரசுக்கும் தொடர்ச்சியான முட்டல் மோதல் நீடித்து வருகிறது. சட்டமன்றத்தில் ஒரு மனதாக நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் இழுத்தடித்தார்.

அதேபோல தமிழ்நாட்டில் சமூக நீதி, முதலீடுகள் ஈர்ப்பு, கல்வி நிலை உள்ளிட்டவைகள் குறித்து தமிழக அரசை நேரடியாக விமர்சனம் செய்து பேசினார். இதனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் ஆலோசனைப் படி செயல்படாமல் ஆளுநர் போட்டி அரசு நடத்துகிறார் என திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் குற்றம்சாட்டின.

2வதாக நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களுக்கு ஒப்புதல் தரவில்லை என குற்றம்சாட்டி ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆளுநர் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காதது சட்ட விரோதம் என்று அறிவித்ததோடு, அதற்கு ஒப்புதலும் அளித்து உத்தரவிட்டது. ஆளுநருக்கு என தனிப்பட்ட அதிகாரிகள் எதுவும் இல்லை என்றும் உத்தரவு பிறப்பித்தது.


ஆளுநருக்கு எதிரான இந்த தீர்ப்பை திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் வரவேற்றுள்ளன. இந்த நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி விரைவில் மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும், புதிய ஆளுநர் நியமனம் தொடர்பாக உள் துறை அமைச்சகம் ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.


இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன் சத்திரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன், “ஆளுநர் விவகாரத்தில் தேவை எனில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து மத்திய அரசு விளக்கம் கேட்கும். அதாவது, ஆளுநரை கட்டுப்படுத்தும் இந்த தீர்ப்பு குடியரசுத் தலைவரையும் கட்டுப்படுத்துமா என்ற ரீதியில் விளக்கம் கேட்கும்.

தமிழ்நாட்டில் அடுத்து ஆட்சி அமைக்க இருக்கும் திமுக அல்லாத புதிய அரசுக்கு, பதவிப் பிரமாணம் செய்து வைத்துவிட்டு தான் ஆளுநர் ஆர்.என்.ரவி செல்வார். அதுவரை ஆளுநர் மாற்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை” என்று உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like