இனி ஓபிஎஸ்-க்கு அரசியல் எதிர்காலம் இல்லை - எஸ்.பி. சண்முக நாதன்..!

சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழுவிற்கும் மற்றும் பொதுச்செயலாளர் நியமனத்திற்கும் எதிரா தொடரப்பட்ட வழக்கு இரு நீதிபதி அமர்வு தள்ளுபடி செய்ததோடு அதிமுக பொதுக்குழு செல்லும் என்றும் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்றும் அதில் நிரைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் செல்லும் என்றும் தீர்ப்பளித்தது.
அதை வரவேற்று கொண்டாடும் விதமாக தூத்துக்குடியில் மாவட்ட அதிமுக அலுவலகம் முன்பு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் திரண்ட நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி இந்த வெற்றி செய்தியை கொண்டாடினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் எஸ்பி சண்முகநாதன் கூறுகையில்,
“ அதிமுக பொது குழுவில் ஒற்றை தலைமை வேண்டும் என்பதன் அடிப்படையில் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். அதை எதிர்த்து பல்வேறு நீதிமன்றம் சென்ற ஒபிஎஸ்-க்கு எதிராகவும் இபிஎஸ்-க்கு ஆதரவாகவும் தீர்ப்பு வந்தது. அதிமுக இபிஎஸ் கையில் தான் உள்ளது என்பதை ஓபிஎஸ் புரிந்து கொள்ள வேண்டும்”, என்றார்.
அண்மையில் மதுரை மாநாடு மூலம் புரட்சித்தலைவர் எம்ஜிஆர், ஜெயலலிதா, ஆகியோரை அடுத்து மூன்றாம் தலைவராக உருவெடுத்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. உயர் நீதிமன்றம் தீர்ப்புக்கு பிறகும் அதிமுக பெயரை உச்சரிப்பதற்கோ சொல்வதற்கோ அவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது, குறிப்பாக வேஷ்டி சின்னம் கொடி போன்றவற்றை ஓபிஎஸ் தரப்பினர் பயன்படுத்தக் கூடாது”, என்றார்.