1. Home
  2. தமிழ்நாடு

இந்த மனுவில் நீதிமன்றம் தலையிட வேண்டிய அவசியம் இல்லை : சுப்ரீம் கோர்ட்..!

1

முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அண்ணா நினைவிட வளாகத்தில், தமிழக அரசு சார்பில் 2.23 ஏக்கர் பரப்பில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில், கருணாநிதியின் இலக்கியப் பணிகளைப் போற்றும் வகையில் மெரினா கடலில் அவருக்கு ரூ.81 கோடி செலவில், 134 அடி உயரத்தில் பிரம்மாண்ட பேனா நினைவுச் சின்னம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், கடலில் பேனா வைப்பதற்கு தடை விதிக்க கோரி மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் கே.கே.ரமேஷ் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதில், "கடல் வளத்தை பாதுகாக்க வேண்டும். கடற்கரையோரங்களில் கட்டுமானங்கள் மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும். மெரினா கடலில் 134 அடி உயரத்துக்கு பின் சின்னம் அமைப்பது கடலோர ஒழுமுறை மண்டல விதிகள் அனைத்தையும் மீறிய நடவடிக்கையாகும்.

அதேபோல காலநிலை மாற்றத்தால் அதிக மழைபொழிவு ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. இந்த காலகட்டத்தில் இவ்வாறான தேவையில்லாத, முக்கியத்துவமற்ற கட்டுமானங்களால் கடலில் பல்வேறு மாற்றங்கள் நிகழும். எனவே பேனா அமைக்கும் தமிழக அரசின் திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்.

மேலும், இந்தியா முழுவதுமாக 6,632 கிலோமீட்டர் அளவுக்கு கடற்கரை உள்ளது. இதில் 33.6 சதவீதம் அளவுக்கு கடல் அரிப்பால் பாதிப்படைந்துள்ளன. எனவே நாடு முழுவதும் கடற்கரை அருகே கட்டுமானத்துக்கு தடை விதிக்க வேண்டும். கடல் அரிப்பை தடுக்கும் விதமாக கடற்கரை ஓரங்களில் அதிக அளவிலான மரங்களை நடுவதற்கு தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, ஒடிசா உள்ளிட்ட கடலோர மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்" என மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெயசுகின், இதேபோன்ற கோரிக்கையுடன் தொடரபட்ட மற்றொரு வழக்கு நிலுவையில் உள்ளதாக தெரிவித்தார். அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், "தேவையற்ற மனுக்களை தாக்கல் செய்து வருவதால் மனுதாரர் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் 2 ஆண்டுகள் தடை விதித்துள்ளது” என்று தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி சந்திரசூட், "இது என்ன மாதிரியான மனு? இதை ஏன் தாக்கல் செய்தீர்கள்?” என கேள்வி எழுப்பினார். மேலும், “பொதுநலனைக் கருத்தில் கொண்டு இந்த மனு தாக்கல் செய்யப்பட்டதாக தெரியவில்லை. இந்த மனுவில் நீதிமன்றம் தலையிட வேண்டிய அவசியம் இல்லை” எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Trending News

Latest News

You May Like