1. Home
  2. தமிழ்நாடு

வாதத்திற்கு மருந்துண்டு... பிடிவாதத்திற்கு மருந்தில்லை...ஆளுநருக்கு டிகேஎஸ் இளங்கோவன் கண்டனம்!

Q

திருவள்ளுவர் திருநாள் விழாவிற்கு ஆளுநர் மாளிகை வெளியிட்ட அழைப்பிதழில், திருவள்ளுவர் காவிநிற உடை அணிந்திருப்பது போன்ற படம் வெளியிடப்பட்டிருந்தது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. “அரசு அங்கீகரித்த திருவள்ளுவர் புகைப்படத்தை மாற்றி, சாதி, மத, சமயம் சார்ந்து ஆளுநர் மாளிகை புகைப்படத்தை வெளியிடுவது சட்டத்திற்குப் புறம்பானது. சட்டத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பில் இருக்கும் ஆளுநரே இப்படிச் செய்வது கண்டனத்திற்குரியது” என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டித்திருந்தார்.
மேலும், “ஏற்கனவே திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்ததால் சர்ச்சை கிளம்பியது. திரும்பவும் காவி உடையுடன் திருவள்ளுவர் படத்தைப் பயன்படுத்தி அழைப்பிதழ் அடித்து ஆளுநர் மாளிகை வெளியிடுகிறது என்றால், ஆளுநரை என்ன தான் செய்ய முடியும்? வாதத்திற்கு மருந்துண்டு. அவருடையை பிடிவாதத்திற்கு மருந்தில்லை” அமைச்சர் ரகுபதி தெரிவித்திருந்தார். இந்நிலையில், இதுதொடர்பாக திமுக செய்தி தொடர்பாளர் குழுத் தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது பேசிய அவர், “தை முதல் நாளை திருவள்ளுவர் தினமாக அதிகாரப்பூர்வமாக தமிழக அரசு ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறது. ஆளுநருக்கு தமிழ்நாடு பண்பாடும் தெரியாது. தமிழ்நாடு பழக்க வழக்கமும் தெரியாது. திருவள்ளுவரும் தெரியாது. ஆளுநர் தான் திருவள்ளுவருக்கு ஜாதகம் பார்த்தவர் போல நட்சத்திரம் எல்லாம் அறிவித்து திருவள்ளுவருக்கும் காவி உடை அணிவித்து, இன்று திருவள்ளுவர் தினம் கொண்டாடுகிறார்.
இது உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை அவமானப்படுத்தும் செயல். திருவள்ளுவருக்கும், ஆளுநருக்கும் எந்த தொடர்பும் இல்லை. வேண்டும் என்றே திட்டமிட்டு பிரமதர் மோடி தொடங்கியதை, ஆளுநர் தொடர்ந்து செய்து வருகிறார்.
ஆளுநரின் செயலை திமுக வன்மையாக கண்டிக்கிறது. திருக்குறளில் ஒரு குறள் கூட ஆளுநருக்கு தெரியாது. ஆளுநரின் செயல்பாடுகளில் அவரின் அறியாமை வெளிப்படுகிறது. இது தமிழர்களுக்கு இழைக்கப்படும் அவமானம்” என்று தெரிவித்தார்.

Trending News

Latest News

You May Like