1. Home
  2. தமிழ்நாடு

கரையில் நிற்கும் 800 படகுகள்... ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டம்..!

1

ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த மார்ச் 16 மற்றும் 20ம் தேதிகளில் மீன்பிடிக்கச் சென்ற 58 மீனவர்களை, 7 விசைப்படகுகளுடன் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மீனவர்கள் அனைவரும் இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களை விடுவிக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், ராமேஸ்வரத்தில் நேற்று அனைத்து விசைப்படகு மீனவர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவர்கள் சங்க செயலாளர் சகாயம் தலைமை வகித்தார். இதில், மீனவ சங்க பிரதிநிதிகள் சேசு ராஜா, எமரிட் உள்பட ஏராளமான மீனவர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், ‘இலங்கையில் சிறையில் உள்ள 58 மீனவர்களையும், பறிமுதல் செய்த 7 விசைப்படகுகளையும் உடனடியாக விடுவிக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வரும் ஏப்.8ம் தேதி ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளை ராமேஸ்வரம் தாசில்தாரிடம் ஒப்படைக்கும் போராட்டம் நடத்தப்பட உள்ளது. அதுவரை மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்லக்கூடாது’’ என முடிவு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி, நேற்று மீனவர்களுக்கு விடுமுறை நாள் என்பதால் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை துவக்கியுள்ளனர். இதனால், 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளன.

Trending News

Latest News

You May Like