கொரோனாவால் டிஜிட்டல் வழியில் தகவல்கள் திருட்டு.? இலவச செயலிகளால் புதிய அபாயம்.!

இணையதள பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், இலவச செயலிகளால், பொதுமக்களின் டிஜிட்டல் தகவல்கள் திருடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்த, பெரும்பாலான நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தி உள்ளன. எனவே, பல்வேறு துறை பணியாளர்கள் தங்களின், தகவல் தொழில்நுட்ப பணிகளை, வீட்டில் இருந்தே மேற்கொள்கின்றனர். இதன் காரணமாக, பல்வேறு செயலிகளின் பதிவிறக்கம் மற்றும் பயன்பாடும் அதிகரித்துள்ளது. பாடங்களை எடுப்பதற்கும், வீடுகளில் இருந்து, 'வீடியோ கான்பரன்ஸ்' கூட்டம் நடத்தவும், கட்டணம் செலுத்துவதற்கும், தனிப்பட்ட செயலிகளை அதிகம் பயன்படுத்துகின்றனர்.
மாணவர்கள் விளையாடுவதற்கும், இளைஞர்கள் தங்கள் பொழுதை போக்கவும், சினிமா பார்க்கவும், பல செயலிகளை டவுன்லோடு செய்கின்றனர். இந்த செயலிகளை பதிவிறக்கம் செய்பவர்களிடம், அவர்களின் மொபைல்போனிலுள்ள, 'வீடியோ' மற்றும் புகைப்பட கேலரிகள், பதிவிறக்கப்பட்ட பைல்களில் உள்ள போல்டர்கள், போன் எண்கள், கேமரா உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்துவதற்கு, செயலிகளில் அனுமதி பெறப்படுகிறது.
பயனாளர்கள் செயலிகளை பதிவிறக்கம் செய்யும் போது, அனைத்து அனுமதிகளையும் கொடுத்து விடுகின்றனர். இதன் காரணமாக, பயனாளர்களின் மொபைல்போனில் உள்ள தகவல்கள், எஸ்.எம்.எஸ்., உள்ளிட்டவை கூட, 'என்க்ரிப்ஷன்' என்ற, பாதுகாப்பு குறியீடுகள் மாற்றப்படாமலேயே, அந்த செயலியின் சர்வரால் உள் வாங்கப்படுகிறது. இந்த தகவல்களை, பல செயலிகளின் நிறுவனங்கள், பல்வேறு மார்க்கெட்டிங் நிறுவனங்களுக்கு விற்று விடுகின்றன.
எனவே, இணையதள பயன்பாடு அதிகரித்துள்ள இந்த நேரத்தில், அலுவலகங்கள் மற்றும் கல்வி பணியில் உள்ளவர்கள், அதி காரப்பூர்வமற்ற இலவச செயலிகளை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு தொழில்நுட்ப வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
பல அரசு அலுவலகங்கள் மற்றும் நிதி பரிவர்த்தனை மேற்கொள்ளும் நிறுவனங்களின் ஊழியர்களுக்கு, இலவச தளங்கள் மற்றும் செயலிகளை பயன்படுத்தாமல் இருக்குமாறு, தொழில்நுட்ப பிரிவு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இது, இணையதள பயன்பாட்டாளர்களுக்கு, புதிய சவாலாக அமைந்துள்ளது.
newstm.in