ஏற்றத்தாழ்வு பார்த்த திரையரங்கு ஊழியர்கள்... களத்தில் குதித்த வட்டாட்சியர் பலராமன்..!

ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த நரிக்குற இன மக்கள் கடலூரில் உள்ள நியூ சினிமா திரையரங்கில் கருடன் சினிமா பார்ப்பதற்காக சென்று உள்ளனர்.திரைப்படம் பார்ப்பதற்கு வந்தவர்களை திரையரங்கு நிர்வாகம் டிக்கெட் கொடுக்க மறுத்ததாக கூறப்படுகின்றது. டிக்கெட் வழங்குவார்கள் என காத்திருந்து அவர்கள் நிர்வாகத்திடம் கேட்டபோது டிக்கெட் வழங்க முடியாது என கூறிவிட்டதாக தெரிய வருகிறது அப்போது திரையரங்கு ஊழியர்கள் உடையை காரணம் காட்டி அவர்களை திரையரங்குக்குள் அனுமதிக்காததால் அவர்கள் கடலூர் கோட்டாட்சியரிடம் புகார் மனு அளிப்பதற்காக திரண்டு சென்றுள்ளனர்.
கோட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருந்த நரிக்குறவ இன மக்களிடம் வட்டாட்சியர் பலராமன் மற்றும் கோட்டாட்சியர் நேர்முக உதவியாளர் அவர்களின் மனுவை பெற்றுக்கொண்டு திரையரங்கு மீது உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் மேலும் தற்போது அவர்கள் படம் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்து அவர்களை திரையரங்குக்கு செல்லுங்கள் என்று தெரிவித்தனர்.
பின்னர் வட்டாட்சியர் பலராமன் தனது அரசு வாகனத்திலேயே நரிக்குறவர்களை திரையரங்கிற்கு படம் பார்க்க அழைத்து சென்றார். அங்கு சென்று அவர்கள் அனைவருக்கும் டிக்கெட் வாங்கி கொடுத்து படம் பார்க்க அனுப்பி வைத்தார். அதன்பிறகு அவர்கள் டிக்கெட்டைப் பெற்றுக் கொண்டு தியேட்டரில் உட்கார்ந்து ஆனந்தமாக கருடன் திரைப்படத்தை ரசித்தனர். கடலூரில் நரிக்குறவர்கள் தியேட்டருக்குள் அனுமதிக்கப்படாத சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.