பள்ளி மாணவியை மிரட்டி அந்தரங்க புகைப்படங்களை பெற்ற இளைஞர்.. இணையத்தில் பரவியதால் அதிர்ச்சி !

நாகை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர், சென்னையில் தங்கி 10ஆம் வகுப்பு படித்துவந்தார்.
அப்போது, சக மாணவியின் உறவினரான மெல்வின் செல்வகுமார் என்பவர் அந்த சிறுமியிடம் நெருங்கி பழகியுள்ளார். பின்னர் சிறுமியை காதலிப்பதாகக் கூறி பழகி வந்துள்ளார். இதனையடுத்து அந்த சிறுமி தனது சொந்த ஊருக்கே சென்று அங்கேயே படிப்பை தொடந்துள்ளார். இருவரும் செல்போன் மூலம் தொடர்ந்து பழகி வந்துள்ளனர்.
இந்நிலையில், சிறுமியின் புகைப்படத்தை அனுப்புமாறு மெல்வின் செல்வகுமார் கேட்டுள்ளார். அதற்கு சிறுமி மறுத்ததால் செல்வகுமார் தன் கையை கிழித்துக்கொண்டு ரத்தம் சொட்டச்சொட்ட வீடியோ எடுத்து அதை அந்த சிறுமிக்கு அனுப்பியுள்ளார்.
இதனால் பதறிப்போன சிறுமி, தனது புகைப்படங்களையும், செல்ஃபிகளையும் செல்வகுமாருக்கு அனுப்பியுள்ளார். மேலும் வீடியோவும் அனுப்பியுள்ளார்.
இந்நிலையில் திடீரென வாட்ஸ்அப்பில் செல்வகுமார் அனுப்பிய மெசேஜை பார்த்து சிறுமி அதிர்ச்சி அடைந்தார். அதில் ஆடைகளின்றி புகைப்படம் அனுப்புமாறு கேட்டுள்ளார். சிறுமியும் மெல்வின் செல்வகுமாரை நம்பி, அரை நிர்வாண புகைப்படங்களை அனுப்பியுள்ளார்.
இந்நிலையில் கடந்த வாரம் சிறுமியின் வீட்டிற்கு வந்த அவரது உறவினர் ஒருவர், சிறுமியின் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் பரவுவதாக கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், இதுகுறித்து சிறுமியிடம் விசாரித்துள்ளனர்.
அப்போது சிறுமி தன்னுடன் பழகி காதலிப்பதாக கூறி செல்வகுமார் ஏமாற்றிவிட்டதாகவும், அவருக்கு தான் நிர்வாண புகைப்படங்களை அனுப்பியதாகவும் நடந்ததை கூறியுள்ளார். அதன்பின்னரே நிர்வாண புகைப்படம் இணையதளத்தில் வைரலானது தெரியவந்துள்ளது.
பின்னர் இதுகுறித்து போலீசாரிடம் அவர்கள் புகாரளித்தனர். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், மெல்வின் செல்வகுமாரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in