பப்ஜி விளையாட்டில் மூழ்கியிருந்த இளைஞர்.. தாய் கண்டித்ததால் அதிர்ச்சி முடிவு !
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த கொள்ளுமேடு பகுதியில் டேனியல் ஜோசப்(17) என்பவர் வசித்து வந்தார். இவர் அப்பகுதியில் உள்ள ஐடிஐ படித்து வந்த நிலையில் பப்ஜி விளையாட்டுக்கு அடிமையானவர் ஆவார்.
டேனியல் ஜோசப் பப்ஜி தடை செய்யப்படுவதற்கு முன்பே அந்த விளையாட்டிற்கு அடிமையாகியிருந்தார். பப்ஜி விளையாட்டை மத்திய அரசு தடை செய்வதற்கு முன்பே தரவிறக்கம் செய்திருந்தால், தடைக்கு பிறகும் அவர் தொடர்ந்து விளையாடி வந்துள்ளார்.
வீட்டில் எவ்வித உதவியும் செய்யாமல், எப்போதும் செல்லும் கையுமாக இருந்ததால் இதுகுறித்துப் பலமுறை பெற்றோர் கண்டித்துள்ளனர். எனினும் அவரால் பப்ஜி விளையாட்டில் இருந்து வெளியில் வர முடியவில்லை. அதைக் கவனித்துக் கவலையடைந்த தாய் பவுலின் ஜேக், மகனை அடிக்கடி கண்டித்து வந்தார். ஆனாலும் டேனியல் கேட்கவில்லை.
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு டேனியல் தனது செல்போனில் நீண்ட நேரம் பப்ஜியில் மூழ்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. அதைப்பார்த்த தாய் மகனைக் கண்டித்து செல்போனைப் பறித்துக் கொண்டு கடைக்கு சென்றுள்ளார். விரக்தி அடைந்த டேனியல், படுக்கை அறைக்குச் சென்று மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சிறிது நேரம் கழித்து வீடு திரும்பிய அவரது தாய் மகன் தற்கொலை செய்து கொண்டதைப் பார்த்து கதறி அழுதார். தகவல் அறிந்து ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் சிறுவன் சடலத்தை மீட்டு வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பப்ஜிக்கு அடிமையான மாணவன் சிறிது நேரமும் கையில் செல்போன் இல்லாமல் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் ஒட்டுமொத்த இளைஞர் சமுதாயத்தையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
newstm.in