பதிவுத்துறையில் மேஜைக்கு கீழ்தான் பணி நடக்கிறது.. உயர்நீதிமன்றம் அதிருப்தி !

தமிழகத்தில் லஞ்சம் விவகாரம் பெரிதாகி வருகிறது. பெரும்பாலான அரசு அதிகாரிகள் பணத்தை பெற்றுக்கொண்டு தான் மக்கள் பணி செய்வதாக வேதனை தெரிவிக்கின்றனர். அன்மையில் சாதாரண மாசுகட்டுப்பாட்டு இணை பொறியாளர் வீட்டில் கோடி கோடியாக பணம், மூன்றரை கிலோ தங்கம், பல கோடிக்கு சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது தமிழகத்தையை உலுக்கியது.
கரூரைச் சேர்ந்த செந்தில் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், தனது நிலத்தின் சர்வே எண்ணில் உள்ள தவறை சரிசெய்ய மண்மங்கலம் வட்டாட்சியருக்கு உத்தரவிடுமாறு கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி வைத்தியநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வட்டாட்சியரின் கடிதத்தின் மீது 2 ஆண்டாக நடவடிக்கை எடுக்காத தாந்தோணிமலை வட்டார வளர்ச்சி அலுவலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
மேலும் வருவாய் துறையிலிருந்து தான் லஞ்சம் தொடங்குவதாக நீதிபதி குறிப்பிட்டார். வட்டாட்சியர்கள் உள்ளிட்டோர் ஆவணங்களை திருத்தி, வருவாய்க்கு மேல் சொத்துகளை குவிப்பதாக கூறினார்.
இதேபோல் பதிவுத்துறை அதிகாரிகளும் செயல்படுவதாகவும், பெரும்பாலான வேலைகள் மேஜைக்கு கீழ் தான் நடைபெறுவதாகவும் நீதிபதி அதிருப்தி தெரிவித்தார்.
பத்திரப்பதிவு எழுத்தர்கள் லஞ்சம் வாங்கித் தரும் ஏஜெண்டுகளாக செயல்படுவதாகவும், லஞ்சம் - ஊழலில் தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசு கழக அதிகாரிகளையும் குறைத்து மதிப்பிட முடியாது என நீதிபதி விமர்சித்தார்.
newstm.in