மதுபிரியர்கள் அதிர்ச்சி..! மதுபானங்கள் விலை ரூ.10 உயர வாய்ப்பு..!
சர்க்கரை ஆலைகளில் கரும்பை பிழிந்து எடுக்கும்போது, கடைசியில் 'மொலாசஸ்' (ஸ்பிரிட்) எனப்படும் வேதிப்பொருள் கிடைக்கும். இதுதான் மதுபானங்கள் தயாரிப்புக்கு முக்கிய மூலப்பொருள் ஆகும். ஒரு லிட்டர் மொலாசசில் 10 லிட்டர் தண்ணீரை ஊற்றி கொதிக்க வைத்து, ஒரு லிட்டர் 'ஸ்பிரிட்' பிரித்து எடுக்கப்படுகின்றன. அதன் மூலம் மதுபானங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. தற்போது 'மொலாசஸ்' விலை லிட்டருக்கு ரூ.3.47 அதிகரித்துள்ளது. மேலும் இதற்கு ஜி.எஸ்.டி. வரியும் உயர்ந்துள்ளது.
இதன் காரணமாக மதுபான ஆலைகளுக்கு உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது. சாதாரணம், நடுத்தரம், உயர்தரம் என்று 3 ரகங்களில் மதுபானங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதில் நடுத்தர, உயர்தர மதுபானங்களை உற்பத்தி செய்வதில்தான் அதிக லாபம் கிடைக்கும் என்றும், சாதாரண ரகங்களில் போதியளவு லாபம் இல்லை என்பதும் மதுபான உற்பத்தி ஆலை உரிமையாளர்களின் கருத்தாகும். எனவே 'மொலாசஸ்' மூலப்பொருள் விலையேற்றதால், சாதாரண ரக மது உற்பத்தியை மதுபான ஆலைகள் வெகுவாக குறைத்துள்ளன.
'டாஸ்மாக்' கடைகளில் சாதாரண ரக மதுபாட்டில்கள் குவாட்டர் ரூ.140-க்கு கீழ் விற்கப்படுகிறது. கூலித்தொழிலாளர்கள் இந்த ரக மதுபானத்தைதான் நாடி செல்கிறார்கள். இந்த நிலையில் உற்பத்தி குறைப்பால் 'டாஸ்மாக்' கடைகளில் சாதாரண ரக மதுபாட்டில்களுக்கு விரைவில் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது.
இந்த நிலையில் சாதாரண ரக மதுபானங்கள் உற்பத்தியை குறைக்கக்கூடாது என்று ஆலைகள் நிர்வாகத்துக்கு 'டாஸ்மாக்' நிர்வாகம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அதற்கு மதுபான ஆலைகள் சார்பில் மதுபானங்கள் உற்பத்தி செலவை உயர்த்தி வழங்க வேண்டும் என்று நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த விவகாரம் பேச்சுவார்த்தையில் உள்ளது. இதில் மதுபான ஆலைகளின் கோரிக்கைகள் ஏற்கப்படும் பட்சத்தில், 'டாஸ்மாக்' கடைகளில் மதுபானங்கள் விலை குவாட்டருக்கு குறைந்தபட்சம் ரூ.10 முதல் அதிகரிக்கக்கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.