நாளை வெளியாகிறது தீர்ப்பு..! தவெக கொடியில் உள்ள யானை சின்னத்திற்கு தடை வருமா?

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியின் உள்ள யானையை நீக்க வேண்டும் என தவெகவுக்கு பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதற்கு தவெக தரப்பில் இருந்து எவ்வித பதிலும் தரப்படவில்லை. இதனையடுத்து, தவெக கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சி மாநில பொதுச் செயலாளர் பெரியார் அன்பன் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் யானை சின்னத்தை பயன்படுத்த தவெகவுக்கு கட்சிக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்.
இவ்வழக்கு விசாரணையின் போது பகுஜன் சமாஜ் தரப்பில், யானை சின்னம் அசாம் தவிர அனைத்து இடங்களிலும் தங்கள் கட்சிக்கே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும், தவெக கொடியில் யானை சின்னம் இடம்பெற்றது தேர்தல் சின்னம் தொடர்பான விதிகளுக்கு முரணானது என்றும் வாதம் வைக்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த தவெக தரப்பில், “பகுஜன் சமாஜ் கொடியில் ஒற்றை யானைதான் உள்ளது. தவெக கொடியில் இரண்டு பிளிரும் யானைகள் உள்ளன. இவை இரண்டிற்கும் எந்த ஒற்றுமையும் கிடையாது” என்று பதில் அளித்தது.
இந்த நிலையில் இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்கிற கோரிக்கை தொடர்பாக இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது தவெக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், “பகுஜன் சமாஜ் கட்சியின் இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்பதால் அதை தள்ளுபடி செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் எங்களுக்கு சாதகமாக ஏற்கனவே தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தவெக கொடிக்கும் பகுஜன் சமாஜ் கட்சி சின்னத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது பார்த்தாலே தெரியும். விளம்பர நோக்கத்திற்காக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது” என்று வாதம் வைத்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தவெக கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்க கோரி பகுஜன் சமாஜ் தாக்கல் செய்த இடைக்கால மனு மீது நாளை உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவாகவே உத்தரவு வர வாய்ப்பு உள்ளதாக அக்கட்சியினர் எதிர்பார்க்கிறார்கள். ஏனெனில் பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னத்தை தவெக சின்னமாக பயன்படுத்தினால் தான் பிரச்னை, ஆனால் தாங்கள் கொடியில் அதுவும் இரட்டை யானைகளையே பயன்படுத்துகிறோம் என்கிறார்கள் தவெகவினர். முன்னதாக தவெக என்ற பெயர் ஆங்கிலத்தில் கூறும்போது TVK என்ற தனது கட்சியின் பெயர் வருவதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் எதிர்ப்பு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.