சாலையோர வீட்டிற்குள் புகுந்த லாரி.. இது முதல் முறையல்ல 3 ஆவது முறையாம்..!
நன்னிலத்தில் இருந்து கும்பகோணம் நோக்கி செல்லும் சாலையில் உள்ள அச்சிதமங்கலம் கிராமத்தில் வசித்து வருபவர் ஜெயராமன் (60). இவர் விவசாய கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பேபி. இவர்களுடன் மருமகள் புவனேஸ்வரி, அவரது மகன்கள் லட்சன், தர்ஷன் ஆகியோர் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்கள் எப்போதும் போல இரவு வீட்டில் உறங்கி கொண்டிருந்தனர்.
இந்த நிலையில், அச்சிதமங்கலம் பகுதியில் சென்று கொண்டிருந்த லாரியானது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த ஜெயராமன் வீட்டில் புகுந்ததில், வீடு முழுவதும் இடிந்து விழுந்துள்ளது. இதில், வீட்டில் உறங்கி கொண்டிருந்த 5 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
தகவல் அறிந்து வந்த நன்னிலம் போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல கடந்த 5 வருடங்களுக்கு முன்பு டால்மியாபுரத்தில் இருந்து நிலக்கரி ஏற்றிவந்த லாரி வீட்டிற்குள் புகுந்து அப்போதும் குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
அதேபோல 10 வருடங்களுக்கு முன்பும் 4 சக்கரம் வாகனம் வீட்டிற்குள் புகுந்தது; அச்சமயமும் குடும்பத்தினர் உயிர் தப்பினர். தற்போது 3வது முறையாக வீட்டிற்குள் லாரி புகுந்துள்ளது. தொடர்ந்து விபத்துக்கள் ஏற்படுவதால் வேகத்தடை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.