பாம்பு பிடி வீரருக்கு நடந்த துயரச் சம்பவம்... ராஜநாகம் கடித்து...

கோயம்புத்தூர் மாவட்டம் மருதமலை அருகே உள்ள வடவள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (39). இவர் குடியிருப்பு பகுதிகளில் நுழையும் பாம்புகளைப் பத்திரமாக மீட்டு, வனப்பகுதியில் விடும் பணியைச் செய்து வந்தார். 20 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு குடியிருப்பு மற்றும் தொழிற்சாலை பகுதிகளில் நுழைந்த கொடிய நஞ்சுள்ள ராஜநாகம் உள்ளிட்ட ஏராளமான பாம்புகளை மீட்டு, வனப்பகுதியில் விட்டுள்ளார்.
இந்த நிலையில் மார்ச் 17ஆம் தேதி காலையில் தொண்டாமுத்தூர் நாலுரோடு பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் நாகப்பாம்பு இருப்பதாக இவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சந்தோஷ் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளார். பின், அங்கிருந்த நாகப்பாம்பினை பிடிக்கும் பணியில் ஈடுபட்டார்.
அப்போது, எதிர்பாராத விதமாக நாகப்பாம்பு அவரை கடித்துள்ளது. இதனால், மயக்கம் அடைந்த அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் (மார்ச் 19) அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த பாம்பு பிடி வீரர் சந்தோஷுக்கு மனைவி, இரண்டு குழந்தைகளும் உள்ளனர். அதில் ஒரு குழந்தை மாற்றுத்திறனாளி குழந்தை என்பதால் சந்தோஷை பிரிந்து வாடும் குடும்பத்திற்கு அரசு உதவி செய்ய வேண்டும் என சூழலியல் ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும், கடந்த 20 வருடங்களுக்கு மேலாக சந்தோஷ் காலநேரம் பார்க்காமல் ஆயிரக்கணக்கான பாம்புகளைக் காப்பாற்றி பத்திரமாக வனப்பகுதியில் விட்டுள்ளார். அதேசமயம் பொதுமக்களையும், பாம்புக் கடியில் இருந்து காப்பாற்றி உள்ளார். அவரது குடும்பத்திற்கு நிதியுதவி மட்டுமின்றி, அவரது மனைவிக்கு அரசுப் பணி வழங்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.