பல்லாவரம் அருகே பேருந்துக்காகக் காத்திருந்தவர்களுக்கு நேர்ந்த சோகம்..!
சென்னை பல்லாவரம் நோக்கி ஜிஎஸ்டி சாலையில் அதிவேகமாக சொகுசு கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் அந்த கார் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடியுள்ளது. அப்போது முன்னால் சென்று கொண்டிருந்த வாகனத்தின் மீது மோதாமல் இருக்க ஓட்டுநர் இடதுபுறம் காரை திருப்ப முயன்றுள்ளார்.
அப்போது சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த கார், ஆட்டோ மீது மோதி பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த பயணிகள் கூட்டத்தில் பாய்ந்தது. இதில் பேருந்துக்காகக் காத்திருந்த பயணிகள் உள்ளிட்ட 7 பேர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பின்னர் படுகாயமடைந்து உயிருக்குப் போராடியவர்களை மீட்டு, உடனடியாக சிகிச்சைக்காக குரோம்பேட்டை மற்றும் தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து ஏற்படுத்திய சொகுசு கார் ஓட்டுநர் ரஞ்சித் (28) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
முதல்கட்ட விசாரணையில், விபத்து ஏற்படுத்திய பி.எம்.டபிள்யூ சொகுசு கார் ஆட்டோ மெட்டிக் கியர் மற்றும் அதிக பவர் உடையது என்று தெரியவந்துள்ளது. போதிய அனுபவம் இருந்தால்தான் இந்த காரை இயக்க முடியும். ஆனால், ஓட்டுநர் ரஞ்சித் இன்று முதல் முறையாக அந்த காரை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.