கென்யாவில் நடந்த கோர விபத்து.. 30 பேர் பலி!!
ஆப்பிரிக்க நாடான கென்யாவின் கிழக்கு பகுதியில் உள்ள மெரு நகரில் இருந்து கடற்கரை நகரமான மொம்பாசாவுக்கு நேற்று முன்தினம் மாலை பேருந்து ஒன்று புறப்பட்டு சென்றது. பேருந்தில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.
பேருந்து மெரு-நைரோபி நெடுஞ்சாலையில் உள்ள ஒரு ஆற்றுபாலத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் தறிக்கெட்டு ஓடிய பேருந்து பாலத்தின் தடுப்பு சுவரை உடைத்து கொண்டு ஆற்றில் கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளனர், 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில் நேற்று முன்தினம் 20 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். நான்கு பேர் மருத்துவமனையில் உயிரிழந்தனர். மேலும், 6 பேரின் உடல்கள் நேற்று மீட்கப்பட்டன 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர் என்று மாவட்ட ஆணையர் நோர்பர்ட் கோமோரா செய்தியாளர்களிடம் கூறினார்.
மேலும், தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இடிபாடுகளில் சிக்கி இருப்பவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறிய அவர், நிதி கரும்புள்ளியில் நடந்த விபத்துக்கான காரணத்துக்கான விசாரணை நடந்து வருகின்றன என்று தெரிவித்துள்ளார்.
கென்யாவின் சாலைகளில் இறந்தவர்களின் எண்ணிக்கை சமீபத்திய ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. 2022-ம் ஆண்டின் முதல் பாதியில், 1,912 பேர் இறந்துள்ளனர், இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 1,754 ஆக இருந்ததில் இருந்து 9 சதவீதம் அதிகமாகும் என்று தேசிய போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு ஆணையத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.