இனி இவர்கள் உணவு வணிகம் செய்தால் ரூ.5000 அபராதம் விதிக்கப்படும் - தமிழக அரசு..!
உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006 இந்தியா முழுவதும் கடந்த 04.08.2011 முதல் நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது. மேற்கண்ட சட்டத்தின்படி உணவுப்பொருள் தயாரிப்பாளர்கள், மொத்த வியாபாரிகள், விநியோகஸ்தர்கள், இருப்புக்கிடங்குகள், ஹோட்டல் மற்றும் டிபன் ஸ்டால், டீக்கடை, மளிகை கடைகள், ஏற்றுமதி (ம) இறக்குமதியாளர்கள், உணவு பொருட்களை விற்பனை செய்யும் இதர வியாபாரிகள், பெட்டிக்கடை வியாபாரிகள், வாகனங்களில் உணவு வணிகம் செய்வோர் உள்ளிட்டோருக்கு உணவு பாதுகாப்பு துறையின் உரிமம்/பதிவுச் சான்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழ் இல்லாமலோ அல்லது காலாவதி உரிமத்துடனோ உணவு வணிகம் செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும்.
எனவே, உணவு வணிகர்கள் கீழ்கண்ட பிரிவின்படி தங்களுடைய உரிமம்/பதிவுச் சான்றிதழை (Foscos.gov.in, இ-சேவை மையம் அல்லது Food Safety Mithra) மூலமாக விண்ணப்பித்துப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. உணவு வணிகம் செய்பவர்கள் உரிமம்/பதிவுச் சான்றிதழ் பெறாமல் உணவு வணிகம் செய்வது சட்டப்படி குற்றமாகும். உணவு பாதுகாப்பு பதிவுச் சான்றிதழ் இல்லாமல் உணவு வணிகம் செய்தால் ரூ.5000 அபராதமும், உரிமம் இல்லாமல் உணவு வணிகம் செய்தால் வழக்கும் பதிவு செய்யப்படும்.
உணவு வணிகம் செய்து கொள்முதல் ரூ.12 இலட்சம் வரை இருந்தால் பதிவுச் சான்றிதழ் ரூ.100 கட்டணம் செலுத்தி பெற்றுக் கொள்ள வேண்டும்.ரூ.12 இலட்சத்திற்கு மேல் கொள்முதல் உணவு வணிகம் செய்பவர்கள் ரூ.2000 மற்றும் தயாரிப்பாளர்கள் மறுபொட்டலமிடுவோர் ரூ.3000, ரூ.5000, ஏற்றுமதியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் ரூ.7500 கட்டணம் செலுத்தி உரிமம் பெற்றுக் கொள்ள வேண்டும். ஆதலால் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அனைத்து உணவு வணிகர்களும் உணவு பாதுகாப்பு துறையின் உரிமம்/பதிவுச் சான்றிதழ் பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.