போட்ட உத்தரவை திரும்பப் பெற்றுள்ளது தமிழக அரசு..!
மக்களவை தேர்தலில் தமிழகத்துக்கான தேர்தல் 19ஆம் தேதி நடந்து முடிந்தது. தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம் பொதுவிடுமுறை அறிவித்திருந்தது.இந்த நிலையில், உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை பணியாளர்கள் அனைவரும் ஓட்டளிக்கவேண்டும். துறையின் உயர் அலுவலர்கள், தங்களுக்கு கீழ் பணியாற்றுபவர்கள் ஓட்டு அளித்தனரா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். தேர்தல் கமிஷன் அறிவித்துள்ள பொது விடுமுறைக்கு எதிராக, ஓட்டளிக்காத பணியாளர்களுக்கு, 19ம் தேதி விடுமுறை வழங்க முடியாது என தெரிவித்துஉள்ளார்.
தமிழக உள்துறை செயலாளர் அமுதா, அலுவலக ஆணையில் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.இதனால் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்ததையடுத்து, தமிழ்நாடு தலைமைச் செயலக ஊழியர்கள் சங்கம் சார்பில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அந்த மனுவில், உள்துறை செயலரின் அலுவலக ஆணை, தேர்தல் நடத்தை விதிகளுக்கு முற்றிலும் முரணானது. இந்திய அரசியலமைப்பு வழங்கியுள்ள, தனி நபர் அடிப்படை சுதந்திரத்தில் தலையிடும் செயலாகும். மேலும், ஓட்டளிக்கத் தவறினால், அரசு பொது விடுமுறையை அளிக்க இயலாது என்பது அதிகார துஷ்பிரயோக செயல். உள்துறை செயலரின் அலுவலக ஆணையால், பணியாளர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆட்பட்டு உள்ளனர். தலைமை செயலக சங்கத்தை பொறுத்தவரை, 100 சதவீதம் ஓட்டளிக்க வேண்டும் என்பதில் கருத்து வேறுபாடு இல்லை.
ஆனால், அதை ஒரு அதிகார ஆணையால் செயல்படுத்த நினைப்பதையும், அதிகார வரம்பிற்கு மீறி செயல்படுத்த முயல்வதையும் ஏற்க முடியாது.எனவே, தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிராக, உள்துறை செயலர் வெளியிட்டுள்ள அலுவலக ஆணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
ஊழியர்களிடையே உள்துறை செயலரின் உத்தரவுக்கு கடும் அதிருப்தியும் எதிர்ப்பும் கிளம்பி, தேர்தல் ஆணையம் வரை மனு அளிக்கப்பட்டதை தொடர்ந்து உள்துறை செயலரின் உத்தரவு திரும்ப பெறப்பட்டுள்ளது.