இருக்கைகள் காலியாக தான் இருந்தன- நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் விளக்கம்..!
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் 30 ஆண்டுகால இசைப் பயணத்தை கொண்டாடும் வகையில் சென்னையை அடுத்து ஈசிஆரில் ’மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி நேற்று (செப்டம்பர் 10) நடத்தப்பட்டது.ஆனால் நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளும் மிக மோசமாக இருந்ததால் சமூகவலைதளங்களில் ரசிகர்கள் தொடர்ந்து கடும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக கிழக்கு கடற்கரை சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் ஏற்பட்ட காலதாமதம் பெங்களூர், கோவை உள்ளிட்ட பகுதிகளில் வந்த ரசிகர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்காமல் திரும்பி சென்றனர்.மேலும் அதிகமான டிக்கெட் விற்பனையால் 1000 ரூபாய் டிக்கெட் வாங்கியவர்களுக்கு கூட இருக்கை கிடைக்கவில்லை என்றும், இதுவரை நடந்ததில் மோசமான இசைநிகழ்ச்சி இதுதான் என்றும் குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலுக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே காரணம் என்று தாம்பரம் காவல் ஆணையரகம் உறுதி செய்துள்ளது.
ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சி விவகாரம் தொடர்பாக தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்தில், நிகழ்ச்சியை நடத்திய ஏசிடிசி நிறுவனத்தின் இயக்குநர் ஹேமந்த் ஆஜரானார். அவரிடம் சுமார் 30 நிமிடங்கள் போலீசார் விசாரணை நடத்தினர். அவருடன் ஏசிடிசி நிறுவன பிரதிநிதி செந்தில் வேலன் விசாரணைக்கு ஆஜரானார்.
விசாரணைக்கு பின்னர் ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடி குறித்து விளக்கம் அளித்த ஏசிடிசி நிறுவனத்தின் இயக்குநர் ஹேமந்த் , “ரசிகர்கள் ஒரே இடத்தில் குவிந்ததால் ஏற்பட்ட குழப்பம் தான் அத்தனைக்கும் காரணம். ஒவ்வொரு பிரிவாக பிரித்து வைத்திருந்த நிலையில் ஒரே இடத்தில் அத்தனை பேரும் குவிந்தனர். 36 ஆயிரம் டிக்கெட்டுகள் தான் நாங்கள் விற்றோம். 5 ஆயிரம் டிக்கெட்டுகள் இலவசமாக தரப்பட்டது. இசை நிகழ்ச்சி நடந்த மைதானத்தில் போதுமான இடமும் இருக்கைகளும் இருந்தன. ரசிகர்கள் அனைவரும் ஒரே பகுதியிலேயே அமர்ந்ததால், மற்றொரு பகுதியில் இருக்கைகள் காலியாக இருந்தன” என விளக்கம் அளித்துள்ளார்.