அமலுக்கு வந்த விதி..! வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டியதாக ஒரே நாளில் 471 வழக்குகள் பதிவு..!
போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் ஆர்.சுதாகர் கடந்த 27-ம்தேதி சுற்றறிக்கை ஒன்றைவெளியிட்டார். அதில், ‘குற்றம்சாட்டப்பட்டவர்களும் வாகனத்தில் ஊடகம், காவல் துறை உள்பட பல்வேறு வகையான ஸ்டிக்கர்களை தவறாக பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் காவல்துறையின் கடுமையான நடவடிக்கைகளில் இருந்து தப்பித்துவிடும்நிலை உள்ளது. எனவே தனியார் வாகனங்களில் அரசால் அங்கீகரிக்கப்படாத ஸ்டிக்கர்களை ஒட்டக்கூடாது. விதிமீறலில் ஈடுபடுபவர்கள் மீது வரும் மே 2-ம் தேதி முதல் மோட்டார் வாகன சட்டத்தின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என எச்சரித்தார்.
இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்பும், ஆதரவும் சம அளவில் வந்தது. ஊடகம், டாக்டர், வழக்கறிஞர் என தங்கள் துறை தொடர்பாக ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, சம்பந்தப்பட்ட துறை சார்ந்தவர்கள் தங்களது வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்ள போக்குவரத்து போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.
துறைக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் ஊடகம், வழக்கறிஞர், டாக்டர் என ஸ்டிக்கர் ஓட்டினால் நடவடிக்கை பாயும். அதேபோன்று நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் ஒட்ட விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது என போக்குவரத்து போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.
இந்தநிலையில், சென்னையில் வாகன நம்பர் பிளேட்டுகளில், ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்ற விதிமுறை அமலுக்கு வந்தது. வாகனங்களை கண்காணித்து, அபராதம் விதிக்கும் நடைமுறையை சென்னை காவல்துறையினர் தீவிரப்படுத்தி உள்ளனர்.
விதியினை மீறு பவர்களுக்கு முதல்முறை ரூ. 500 அபராதம் விதிக்கப்படும். இரண்டாவது முறை ரூ. 1500 அபராதமாக வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊடகத்தில் பணியாற்றுபவரின் பெயரில் வாகனம் இருந்தால், அவர் அந்த வண்டியில் ’ஊடகம்’ என்னும் ஸ்டிக்கரை ஒட்டிக்கொள்ளலாம்.ஆனால் வாகனம் வேறொரு பெயரில் இருந்து அதனை பயன்படுத்தி ஸ்டிக்கர் ஒட்டியிருந்தாலோ, உறவினர்கள் யாராவது ஊடகம் ஸ்டிக்கர் ஒட்டி வாகனத்தை பயன்படுத்தி வந்தாலோ, கண்டிப்பாக அபராதம் விதிக்கப்படும் என்று விளக்கமளித்துள்ளது.
இந்நிலையில், வாகன நம்பர் பிளேட்களில் ஸ்டிக்கர் ஒட்டியதாக ஒரே நாளில் 471 வழக்குகள் பதிவு செய்துள்ளது சென்னை போக்குவரத்து காவல்துறை. இதில் 121 போலீஸ் வாகனங்களும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.