1. Home
  2. தமிழ்நாடு

நாளை அமுலுக்கு வருகிறது ரூ.1000 மகளிர் திட்டம் - ஏற்கப்படாத பயனாளிகள் மேல்முறையீடு செய்வது எப்படி ?

1

நாளை முதல் திமுகவின் முக்கிய வாக்குறுதியான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் அமலுக்கு வரவுள்ளது. இந்த திட்டத்தைக் காஞ்சிபுரத்தில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார். இதற்கான வேலைகளை நிதித்துறை செய்து வருகிறது.

1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பயனாளர்கள் இத்திட்டத்தில் பயனடைய உள்ளனர். கடந்த செப்டம்பர் 11ஆம் தேதி இதுதொடர்பாக ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின் , அப்போது, “தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும். பயனாளிகளுக்கு பணத்தை எடுப்பதில் எந்த சிக்கலும் ஏற்படக்கூடாது. அதிலும் கவனமாக இருக்க வேண்டும்” என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.

இந்தநிலையில் கலைஞர் மகளிர் உரிமை விண்ணப்ப திட்டத்தில் விண்ணப்பங்கள் ஏற்கப்படாதவர்கள் மேல்முறையீடு செய்யலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

விண்ணப்பதாரர்களின்‌ விண்ணப்ப முடிவு நிலை குறித்த குறுஞ்செய்தி விண்ணப்பதார்களின்‌ பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிற்கு 18.09.2023 முதல்‌ அனுப்பி வைக்கப்படும்‌. இவ்வாறு ஏற்கப்படாத விண்ணப்பதாரர்கள்‌ மேல்முறையீடு செய்ய விரும்பினால்‌, குறுஞ்செய்தி பெறப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள்‌ இ-சேவை மையம்‌ வழியாக வருவாய்‌ கோட்டாட்சியருக்கு மேல்முறையீடு செய்யலாம்‌. மேல்முறையீட்டு விண்ணப்பங்கள்‌ 30 நாட்களுக்குள்‌ தீர்வு செய்யப்படும்‌.

வருவாய்‌ கோட்டாட்‌சியர்‌ மேல்முறையீட்டு அலுவலராகச்‌ செயல்படுவார்‌. இணையதளம்‌ மூலம்‌ செய்யப்படும்‌ மேல்முறையீடுகள்‌, அரசு தகவல்‌ தரவு தளங்களில்‌ உள்ள தகவல்களுடன்‌ ஒப்பிட்டுச்‌ சரிபார்க்கப்பட்டு, வருவாய்‌ கோட்டாட்‌சியருக்கு அனுப்பி வைக்கப்படும்‌. வருவாய்‌ கோட்டாட்சியர்‌ மேல்முறையீட்டு விண்ணப்பங்களைத்‌ தீர்வு செய்ய கள ஆய்வு தேவைப்படும்‌ நேர்வுகளில்‌, சம்பந்தப்பட்ட சமூகப்‌ பாதுகாப்புத்‌ திட்ட வட்டாட்சியர்கள்‌ வழி கள ஆய்வு அறிக்கையினைப்‌ பெற்று விசாரணை செய்வார்‌. இந்த மேல்முறையீடு நடைமுறைகள்‌ அனைத்தும்‌ இணையதளம்‌ வழியாக மட்டுமே செய்யப்படும்‌.

வருவாய்‌ கோட்டாட்சியர்‌ பயனாளிகளின்‌ தகுதி மற்றும்‌ தகுதியின்மைகள்‌ தொடர்பாக தனி நபர்களின்‌ மூலம்‌ வரப்பெறும்‌ புகார்கள்‌ குறித்த விசாரணை அலுவலராகச்‌ செயல்படுவார்‌. இணையதளம்‌ வழியாகப்‌ பெறப்படும்‌ புகார்கள்‌ மேல்‌ முறையீட்டு மனுக்களுக்கு பின்பற்றப்படும்‌ நடைமுறைகளைப்‌ பின்பற்றி விசாரிக்கப்படும்‌ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like