அரசு பஸ்ஸை திருடியது மட்டுமில்லாமல் பயணிகளை ஏற்றி ஒரு ரவுண்டு கிளம்பிய கொள்ளையன்..!

தெலங்கானா மாநிலம் சித்திப்பேட்டை அரசு போக்குவரத்து கழக டிரைவராக சுவாமி என்பவர் பணி புரிந்து வருகிறார். வழக்கம் போல் ஞாயிற்றுக்கிழமை இரவும் ஆர்டிசி டெப்போ எதிரே உள்ள சாலையில், டிரைவர் பஸ்சை நிறுத்தினார். ஆனால் பஸ் டிரைவர் பஸ் சாவியை மறந்து அதில் வைத்து விட்டார். இரவு அங்கு வந்த ஒருவர் அந்த பஸ்சில் வெமுலவாடா சென்றார்.
அங்கிருந்து ஐதராபாத் என கூறி பயணிகளை ஏற்றி கொண்டான். அதில் 35 பயணிகள் ஏறிய நிலையில் டிக்கெட் பெற்று கொள்ளும்படி கூறியதற்கு பணத்தை மட்டும் பெற்று கொண்டு பாதி வழியில் நடத்துனர் வருவார் என கூறியுள்ளார். இந்நிலையில் நேரல்லா என்ற இடத்தில் சென்றபோது டீசல் தீர்ந்து பஸ் நின்று விட்டது. இதனால் பயணிகளை வேறு பஸ்சில் செல்லுமாறு கூறினார். டிரைவர் நடத்தையில் சந்தேகமடைந்த பயணிகள் தொடர்ந்து கேள்வி கேட்டதால் ஆமாம் பஸ்சை திருடி வந்தேன் எனக் கூறி அங்கிருந்து சென்று விட்டான்.
இதனை அங்கிருந்த சக பயணிகள் செல்போனில் வீடியோ எடுத்தனர். பின்னர் பயணிகள் போக்குவரத்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து பஸ்சை காணும் என தேடி வந்த டிரைவர் சுவாமியின் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த சித்திப்பேட்டை முதலாவது நகர காவல் நிலையப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணா ரெட்டி பயணிகள் எடுத்த வீடியோ ஆதாரமாக கொண்டு விசாரித்ததில் பஸ்சை கடத்தியது சிரிசில்லா மாவட்டம் கம்பீரப்பேட்டையைச் சேர்ந்த பந்தேல ராஜு என அடையாளம் காணப்பட்டு கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.