1. Home
  2. தமிழ்நாடு

இடிபாடுகளில் சிக்கியவர்களுடன் தொடர்பை ஏற்படுத்திய மீட்புக் குழு..!

1

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் உள்ள தண்டல்கான் பகுதியை சில்க்யாரா பகுதியுடன் இணைக்கும் விதமாக சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சார் தாம் சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக, உத்தரகாசியிலிருந்து யமுனோத்ரி தாம் வரையிலான பயணத்தை 26 கிலோ மீட்டர் குறைக்கும் நோக்கத்தில் இந்த சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. 

இதனிடையே, கடந்த ஞாயிறு அதிகாலை 4 மணியளவில் 4.5 கி.மீ. நீளமுள்ள இந்த சுரங்கப் பாதையில் 200 மீட்டர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. மீட்புப்பணி குறித்து பேசிய உத்தராகண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி, இச்சம்பவம் குறித்து அறிந்ததில் இருந்தே அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு வருகிறேன். தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்தில் உள்ளனர். அனைவரும் பாதுகாப்பாக திரும்பி வர இறைவனை பிரார்த்திக்கிறோம் எனக் கூறியிருந்தார்.  

இந்த நிலையில் இது குறித்து மீட்புக் குழு தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது, 

தொழிலாளர்கள் பத்திரமாக இருக்கின்றனர். வாக்கி டாக்கி மூலம் அவர்களுடன் தொடர்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவர்களுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன. கம்ப்ரஸர் மூலம் அவை வழங்கப்பட்டுள்ளன. தொடர்ந்து டிரில்லிங் பணி நடைபெறுகிறது. இடிபாடுகளில் டிரில் செய்து தொழிலாளர்கள் வெளியேற பாதை அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீட்புப் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர், மாநில பேரிடர் மீட்புப் படையினர், இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்பு போலீசார், எல்லை சாலை அமைப்பினர் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். மாவட்ட அவசரகால ஆபரேஷன் மையம் அளித்துள்ள தகவலின்படி விபத்தில் சிக்கிய தொழிலாளர்கள் பீகார், ஜார்க்கண்ட், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், ஒடிசா, உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம். மேற்கு வங்கம், ஒடிசா மாநிலங்களைச் சேர்ந்தவர்களாவர்.

Trending News

Latest News

You May Like