1. Home
  2. தமிழ்நாடு

பொதுமக்கள் அவதி..! எப்போதும் இல்லாத வகையில் மருத்துவர்கள் பற்றாக்குறை..!

Q

தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள், நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்கள் போன்றவை உள்ளன. இந்த மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பற்றாக்குறை நிலவுவதாகவும், மருத்துவர்கள், மருத்துவ மாணவர்களுக்கு கூடுதல் பணிசுமை அதிகரித்துள்ளதாகவும், நோயாளிகளுக்கு உடனுக்குடன் சிகிச்சை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு மருத்துவர்கள் சங்கம் சார்பில், சுகாதாரத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர், சுகாதாரத் துறை அமைச்சர், மருத்துவக்கல்வி இயக்குனர், ஊரக நலப்பணிகள் இயக்குனர் அனுப்பியுள்ள கடிதம் ஒன்று தற்போது வெளியாகி, மருத்துவத்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்தக் கடிதத்தில் அவர்கள் கூறியுள்ளதாவது:-
தமிழகத்தில் எப்போதும் இல்லாத அளவிற்கு மருத்துவர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே பற்றாக்குறை உள்ள நிலையில், தற்போது பாண்ட் பணி முடிந்து சுமார் 250 மருத்துவர்கள் பணியில் இருந்து சென்றுவிட்டார்கள். இந்த நிலைமை 2024 அக்டோரில் ஏற்படும் என்றும், அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் தமிழக அரசையும், இயக்குனர்களையும் வலியுறுத்தியது. ஆனால், உரிய நடவடிக்கை எடுக்காததால் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மகப்பேறு மருத்துவமனைகளிலும் தற்போது ஒரு அசாதாரணமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மருத்துவர்கள் பற்றாக்குறையால் பணியில் இருக்கும் மருத்துவர்கள் மீது கூடுதல் பணி சுமை ஏற்பட்டுள்ளது. அவர்கள் மிகுந்த உடல் மற்றும் மன உளைச்சலில் உள்ளனர். பல ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் மருத்துவமனைகளில் ஒரே ஒரு மருத்துவர் உள்ளார். 24 மணி நேரம் விபத்து சிகிச்சை, அவசர சிகிச்சை, போஸ்ட் மார்ட்டம், பிரசவம் போன்ற பணிகள் பார்க்கக்கூடிய அரசு மருத்துவமனைகளில் ஒரு மருத்துவர் மட்டும் உள்ளதால் 24 மணி நேரமும் செயல்பட முடியவில்லை. ஆரம்ப சுகாதார நிலையங்களில் 2,500 காலியிடங்களும் (40 சதவீதம்), புறநகர் மருத்துவமனைகளில் சுமார் 1,000 காலியிடங்களும் (33 சதவீதம்), மகப்பேறு மருத்துவமனைகளில் 250 (25 சதவீதம்) காலியிடங்களும், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 2,500 காலியிடங்களும் உள்ளன.
மருத்துவக்கல்வி இயக்ககத்தில் 2023-ம் ஆண்டு இணை பேராசிரியர் பதவி உயர்வுகள் 20 மாதங்கள் தாமதம் ஆகியும் வழங்கப்படவில்லை. 2024 ம் ஆண்டு இயக்குனர், பேராசிரியர் மற்றும் இணை பேராசிரியர்கள் பதவி உயர்வுகளும், இன்னும் ஆரம்பிக்கப்படவே இல்லை. அதனால், பதவி உயர்வுக்காக காத்திருக்கும் மருத்துவர்கள் மிகுந்த மனச்சோர்வுடன் பண நஷ்டத்திற்கும் உள்ளாகிறார்கள்.
2023-ம் ஆண்டு இணை பேராசிரியர் பதவி உயர்வுகளை உடனடியாக வழங்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்தவித வருத்தமும் இன்றி ‘பார்க்கலாம்’ என்றும், ‘மேலும் தாமதமாகலாம்’ என்றும் எந்தவித பொறுப்பும் இல்லாமல் அலட்சியமாக கூறுவது இதுவரை நடந்திடாதது. பேராசிரியர்களில் 500 காலி இடமும், இணை பேராசிரியர்களில் 1,000 காலியிடங்களும், உதவி பேராசிரியர்களில் 1,000 காலியிடங்களும், தற்போது உள்ளன. பேராசிரியர், இணை பேராசிரியர் பதவி உயர்வுகளை வழங்கினால்தான் அந்த காலியிடங்களை உதவி பேராசிரியர்களை கொண்டு நிரப்ப இயலும்.
மகப்பேறு துறையில் பல்வேறு முறையில் கர்ப்பிணிகள் இறப்பை குறைப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனாலும் கூட முக்கிய தேவையான மகப்பேறு மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சிவகங்கை மாவட்டத்தில் 3 சீமாங் மருத்துவமனைகள் உள்ளன. அங்கு 17 மகப்பேறு மருத்துவர்கள் தேவை. ஆனால், இரண்டு மருத்துவர்கள் மட்டுமே உள்ளனர். திருச்சி மாவட்டத்தில் 5 சீமாங் மருத்துவமனைகள் உள்ளன. அங்கு சுமார் 30 மகப்பேறு மருத்துவர்கள் தேவை. ஆனால், இருப்பதோ 9 மகப்பேறு மருத்துவர்கள் மட்டுமே. மகப்பேறு மருத்துவர்கள் எண்ணிக்கையை கூட்டாமல் கர்ப்பிணிகள் இறப்பை இதற்கு மேலும் குறைப்பது கடினம்.
நீதிமன்ற வழக்கால் 2024ம் ஆண்டு நீட் பட்ட மேற்படிப்பு கவுன்சிலிங் தாமதமாகி வருகிறது. அடுத்த மாதத்தில் கவுன்சிலிங் நடந்தால் அதற்கு சுமார் 1,000 மருத்துவர்கள் குறிப்பாக ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருந்து சென்றுவிடுவார்கள். பட்ட மேற்படிப்பு முடித்து மீண்டும் பணிக்கு வரும் ஸ்பெஷலிஸ்ட் மருத்துவர்கள் மார்ச் 2025 ஆண்டு வரவிருக்கும் நிலையில் அடுத்த ஐந்து மாதங்கள் மிகவும் கஷ்டமாக இருக்கும்.
அதனால், ஏற்கனவே அறிவித்திருந்த 2,500 எம்ஆர்பி மருத்துவர்கள் தேர்வை துரிதப்படுத்த வேண்டும். இந்த பிரச்சினைகள் அனைத்தும் மிக அவசரமானவை. நேரடியாக தலையிட்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க தலைவர் டாக்டர் கே.செந்திலிடம் கேட்டபோது, ‘‘கடிதம் அரசுக்கு அனுப்பியது உண்மைதான். இது தொடர்பாக நடவடிக்கை எடுத்து வருவதாக சுகாதாரத் துறை கூடுதல் தலைமை செயலாளர் உறுதியளித்துள்ளார்’’ என்றார்.

Trending News

Latest News

You May Like