அட்ஜஸ்ட்மெண்ட்க்கு அழைத்த பேராசிரியர்.. கண்டுகொள்ளாத கல்லூரி முதல்வர்... தீக்குளித்த மாணவி பலி..!
ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் இயங்கி வரும் கல்லூரி ஒன்றில் பி.எட் படித்து வந்துள்ளார் 20 வயது மாணவி ஒருவர்.இந்த மாணவிற்கு பேராசிரியரும் துறைத் தலைவருமான சமீரா குமார் சாகு தொடர்ச்சியாக பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார்.
மேலும் தனது ஆசைக்கு மாணவி இணங்காவிட்டால் அவரால் டிகிரி கம்ப்ளீட் பண்ண முடியாது என்றும் பேராசிரியர் அந்த மாணவியை மிரட்டி இருக்கிறார். இதனால் பயந்து போன அந்த மாணவி இதுகுறித்து கல்லூரி முதல்வரிடம் புகார் செய்ய சென்றார். ஆனால் இந்த புகாரை கல்லூரி முதல்வர் திலீப் குமார் போஸ் முறையாக விசாரிக்கவில்லை என்று தெரிகிறது.
மேலும் மாணவியிடம் இது பற்றி பெரிதுபடுத்தாமல் செல்லுமாறு கல்லூரி முதல்வர் எச்சரித்து இருக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி வேறு வழியில்லாமல் கல்லூரி வளாகத்திலேயே தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். அவரது உடலில் தீ பரவியதால் அங்கிருந்த சக மாணவர் ஒருவர் விரைந்து சென்று மாணவியை காப்பாற்ற முயன்றார்.இதில் அந்த மாணவருக்கும் உடலில் தீ பற்றி எரிந்தது. கல்லூரி வளாகத்தில் மாணவரும் மாணவியும் தீப்பிடித்து அலறிய சம்பவம் அங்கு பெரும் பீதியை ஏற்படுத்தியது. இதை அடுத்து கல்லூரி ஊழியர்கள் இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதை அடுத்து புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இருவரும் கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த நிலையில், தீக்காயப் பிரிவில் நிபுணர்கள் குழுவினர் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி மாணவி நேற்று இரவு பரிதாபமாக பலியாகினார்.இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.