நாளை மறுநாள் முதல் காலணிகள் விலை உயர போகிறது..!
ஆகஸ்ட் 1ம் தேதி முதல் காலணிகளின் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது..புதிய தரநிலை விதிகள் அமலுக்கு வருவதாலேயே காலணி விலை உயர இருக்கிறது.
சந்தையில் விற்கப்படும் காலணிகள், ஷூகளுக்கு புதிய தரத்தை பிஐஎஸ் எனப்படும் Bureau of Indian Standard நிர்ணயம் செய்துள்ள நிலையில், இதன் காரணமாக ஆகஸ்ட் 1ம் தேதி முதல் காலணிகள் விலை உயர வாய்ப்பு இருக்கிறது. இந்த புதிய தரக் கட்டுப்பாட்டு உத்தரவின்படி காலணி உற்பத்தியாளர்கள் IS 6721 மற்றும் IS 10702 வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.இதன் மூலம் காலணிகளின் தரம் உயரும். அதேநேரம் இதனால் உற்பத்தியாளர்களின் செலவும் அதிகரிக்கலாம் என்பதால் காலணி விலையும் உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரம் ஆண்டு வருவாய் ரூ. 50 கோடிக்கும் குறைவாக இருக்கும் நிறுவனங்களுக்கு பிஐஎஸ் அமைப்பின் இந்த விதியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பழைய காலணிகள் கையிருப்பில் இருந்தால் அவை வழக்கம் போல விற்கலாம். அவற்றுக்கு இந்த விதி பொருந்தாது..
காலணிகள் மட்டுமின்றி மொத்தம் 46 பொருட்களுக்குத் திருத்தப்பட்ட தரத்தை பிஐஎஸ் அறிவித்துள்ள நிலையில், அவை அனைத்தும் ஆகஸ்டு 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இந்த புதிய திருத்தப்பட்ட தர விதியின் கீழ், ரெக்சின், இன்சோல் மற்றும் லைனிங் எனக் காலணிகளில் முக்கியமாகப் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் கெமிக்கல் பண்புகள் சோதிக்க வேண்டும். அதேபோல வெளிப்புறப் பகுதியை உருவாக்கப் பயன்படுத்தப்படும் பொருளின் வலிமை மற்றும் நெகிழ்வுத்தன்மை ஆகியவையும் கடுமையான சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்பதே விதிமுறையாகும்.
இந்த புதிய விதிகள் காலணிகள் நீண்ட காலம் பயன்படுத்தும் அளவுக்குத் தரத்தில் வலுவாக இருப்பதை உறுதி செய்யும். மேலும், இது நுகர்வோருக்கு ஏற்படும் அசௌகரியத்தைக் குறைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
.png)