மீண்டும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் : ‘அண்ணாமலை வேண்டும்…. அதிமுக வேண்டாம்’..!

தமிழ பாஜக தலைவராக உள்ள அண்ணாமலை மாற்றப்பட்டு அவருக்குப் பதிலாக வேறொருவர் நியமிக்கப்பட உள்ளதாக கடந்த சில நாட்களாக தகவல் பரவி வருகிறது.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித்ஷாவை நேரில் சந்தித்தார். அப்போது வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி குறித்து பேசப்பட்டதாகவும், அப்போது அண்ணாமலையை தமிழக பாஜக மாநில தலைவர் பதவியில் இருந்து மாற்ற வலியுறுத்தியதாகவும் தகவல் வெளியானது.
இதனால் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விரைவில் மாற்றப்படுவார் எனக் கூறப்பட்டது. அடுத்த பாஜக தலைவருக்கான போட்டியில் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. தமிழக பாஜக தலைவர் மாற்றம் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது.
இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மாற்றத்திற்கு கட்சிக்குள் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பாஜக மாநில தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை நீக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அதிமுகவுடன் கூட்டணி வேண்டாம் என்றும் பாஜக நிர்வாகிகள் சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
"தற்குறியுடன் கூட்டணி வேண்டாம்", "கூடா நட்பு கேடாய் முடியும்" என அதிமுகவை விமர்சிக்கும் வகையிலும் "வேண்டும் மீண்டும் அண்ணாமலை" என அண்ணாமலைக்கு ஆதரவு தெரிவித்தும் வாசகங்கள் அடங்கிய சுவரொட்டி விருதுநகரில் ஒட்டப்பட்டுள்ளது.