சூடுபிடிக்கும் அரசியல் களம்...ஒரே மேடையில் திருமாவளவன் மற்றும் விஜய்..!
தமிழக வெற்றி கழகம் மாநாட்டில் தனது கட்சியின் கொள்கையையும், கோட்பாட்டையும் வெளியிட்டார் விஜய். அவரது கொள்கை, கோட்பாட்டிற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வரவேற்பையும், விமர்சனங்களையும் முன்வைத்து வந்தனர். அந்த மாநாட்டில் விஜய் தனது கட்சியுடன் கூட்டணி வைப்பவர்களுக்கு ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு உண்டு என அறிவித்து இருந்தார். இந்த அறிவிப்பு சிறிய கட்சிகள் பலவற்றையும் பெரிதும் ஈர்த்தது.
இந்த நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனும் ஒரே நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவுள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டிசம்பர் 6ஆம் தேதி அம்பேத்கர் குறித்து தனியார் வார இதழ் நடத்தவுள்ள புத்தக வெளியீட்டு விழாவில்,விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்யும் பங்கேற்கின்றனர்.
விசிக தலைவர் திருமாவளவன் புத்தகத்தை வெளியிட, விஜய் அதனை பெற்றுக்கொள்கிறார். ஒரே நிகழ்ச்சியில் திருமாவளவன் மற்றும் விஜய் பங்கேற்பது தமிழக அரசியலில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, தவெக மாநாட்டில், கூட்டணிக் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு என விஜய் கூறியதை விசிக கடுமையாக விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.
இந்த தகவல் தமிழக வெற்றிக் கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்கள் மத்தியில் பரபரப்பையும், விறுவிறுப்பையும் உருவாக்கி இருக்கிறது. அது மட்டுமின்றி மற்ற கட்சி தலைவர்களும் இதை மிக முக்கியமான புதிய அரசியல் திருப்பமாக பார்க்கிறார்கள்.
புத்தகத்தின் தலைப்பு என்ன என்பது இதுவரை வெளியிடப்படவில்லை. அதுபோல புத்தக வெளியீட்டு விழா சென்னையில் எங்கு நடைபெறுகிறது என்ற தகவலும் வெளியிடாமல் ரகசியமாக வைக்கப்பட்டு உள்ளது.