ஷாக் கொடுத்த போலீஸ்.! கொடிக்கம்பம் நடுவதற்கு செக்!
தமிழகத்தில் திமுக, அதிமுகவிற்கு போட்டியாக நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். வருகின்ற சட்டமன்றத் தேர்தலை இலக்காக கொண்டு தேர்தல் களத்தில் இறங்கி உள்ளார். இதனிடையே தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாட்டை செப்டம்பர் மாதம் நடத்த நடிகர் விஜய் திட்டமிட்டுள்ளார் இதற்கு முதல் கட்டமாக கட்சியின் கொடி அறிமுக விழா நடைபெற்றது. இதில் விஜய் கலந்து கொண்டு கொடியை அறிமுகம் செய்துவிட்டு தமிழக வெற்றி கழக பாடலையும் வெளியிட்டுள்ளார்.
தமிழக வெற்றி கழகத்தின் கொடி அறிமுகப்படுத்தப்பட்ட அடுத்த சில மணிநேரங்களில் அந்தக் கட்சியின் கொடியின் சின்னத்திற்கும் எதிராக பல்வேறு புகார்கள் தெரிவிக்கப்பட்டது. இது தங்கள் கட்சியின் சின்னம், இது தங்கள் கட்சியின் நிறம், இது ஸ்பெயின் நாட்டு கொடியின் நிறம் என அடுத்தடுத்து விமர்சிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் மீண்டும் ஒரு தகவல் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் மட்டுமில்லாமல் நடிகர் விஜய்யையும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது. அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியினை மக்களின் பார்வைக்கு கொண்டு செல்லும் வகையில், 234 தொகுதிகளிலும் கொடியை ஏற்றவும், தங்களது இல்லங்களில் பறக்க விடவும் தவெக நிர்வாகிகளுக்கு உத்தரவு; பொது இடங்களில் கட்சி கொடியை ஏற்ற காவல்துறையிடம் உரிய அனுமதி பெற அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால் பல இடங்களில் அனுமதி பெறாமல் கொடியேற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை கோரிப்பாளையத்தில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் 50 அடி உயர கொடிக்கம்பம் நடுவதற்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சியின் தடையில்லா சான்றிதழை இணைக்காததால் அனுமதி ரத்து என காவல்துறை தரப்பில் விளக்கம் அளித்துள்ளது. இதே போல தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கொடியேற்றும் நிகழ்வின் போது காவல்துறையினருக்கும் தவெகவினருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.