இந்த கிராமத்தில் இருக்கும் 800 குடும்பத்தின் பரிதாப நிலை..! குடிநீரில் தவளைகள்..!
பொம்மனம்பட்டி கிராமத்தில் 800க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக வரும் குடிநீரும் கலங்கிய நிலையில், அதில் தவளைகள் இருப்பதாக அப்பகுதியினர் குற்றம் சாட்டுகின்றனர்.இந்த கிராமம் திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 6வது வார்டில் உள்ளது
இதனால் தொற்று நோய் மற்றும் ஒவ்வாமை, வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற உடல் உபாதைகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இப்பிரச்னை குறித்து நகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தும் கண்டுகொள்ளவில்லை என்றும் குற்றம் சாட்டுகின்றனர். எனவே தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் உடனடியாக இப்பிரச்னையில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த ரதீஸ் பாண்டியன் கூறுகையில், ‘‘எங்கள் ஊருக்கு காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டம் மூலம் வாரம் இருமுறை குடிநீர் வருவது வழக்கம். கூட்டுக்குடிநீர் திட்டத்தின் குடிநீர் குழாய் செல்லும் வழியில், தனியார் ரியல் எஸ்டேட் பணிகள் மற்றும் குடியிருப்புகளுக்காக சாலை மூடப்பட்டுள்ளது.
இதனால் அந்த இடத்தில் குளம் போல் தேங்கியுள்ள தண்ணீர் மழைநீருடன் கலந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் செலுத்தப்பட்டு குழாய்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த குடிநீரில் கடந்த ஒரு வாரமாக கலங்கிய நிலையில் உள்ளதால், தவளைகள் நடமாடுவதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் வாந்தி, பேதி, தொற்று நோய்களால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.