படத்தில் நடிக்க வைப்பதாக கூறி இளம்பெண்ணை சீரழித்த புகைப்பட கலைஞர்!!

திரைப்படத்தில் நடிக்க வைப்பதாக நாடகமாடி இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த புகைப்பட கலைஞரை போலீசார் கைது செய்தனர்.
மதுரையை சேர்ந்த கணேஷ் ஆனந்த் என்ற நபர் கோவை கணபதி பகுதியில் வாடகை வீட்டில் தங்கி போட்டோ எடுத்து வந்துள்ளார். கணேஷ் ஆனந்த் தனது முகநூல் பக்கத்தில், தான் திரைப்படம் எடுப்பதாகவும், அதற்கு நடிகை தேவை என பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இதைப் பார்த்த கோவையை சேர்ந்த திருமணமாகாத 25 வயது இளம்பெண் ஒருவர், கணேஷ் ஆனந்தை தொடர்பு கொண்டு தனக்கு துணை நடிகை வாய்ப்பு வழங்குமாறு கேட்டுள்ளார். அந்த இளம்பெண்ணை வரவழைத்த கணேஷ் ஆனந்த், பல்வேறு பகுதிக்கு அழைத்து சென்று புகைப்படங்கள் எடுத்துள்ளார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் அந்த பெண்ணை தொடர்பு கொண்ட கணேஷ் ஆனந்த், தான் ஒரு இளமையான காதல் கதையை படமாக்க உள்ளதாகவும், அதில் கதாநாயகி வேடத்திற்கு புகைப்படம் எடுக்க வேண்டும் எனக் கூறி அந்த பெண்ணை தனது வீட்டுக்கு அழைத்துள்ளார்.
அப்பெண் வீட்டுக்கு வந்தவுடன், அவருக்கு சிறிய ஆடை கொடுத்து அணிய வைத்ததோடு, அந்த ஆடையில் புகைப்படங்களை எடுத்துள்ளார். மேலும் ஆடையை ஒழுங்குபடுத்துவது போல் அத்துமீற முயன்றதாக கூறப்படுகிறது.
அப்போது அந்த பெண் எச்சரித்த நிலையில், கணேஷ் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட இளம்பெண் கோவை கிழக்கு பகுதி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பாலியல் வன்கொடுமை வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்த போலீஸார், கணேஷ் ஆனந்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
newstm.in