மூடநம்பிக்கை உச்சம்... குழந்தை வரம் வேண்டி கோழிக்குஞ்சை விழுங்கியவர் பலி!
சத்தீஸ்கர் மாநிலம் சிந்த்காலோ என்ற ஊரைச் சேர்ந்தவர் ஆனந்த் யாதவ். 35 வயதான அவருக்கு திருமணமாகி குழந்தைகள் இல்லை. மந்திர, தந்திரங்களில் அதீத நம்பிக்கை கொண்டவர். தந்தையாக வேண்டும் என்பதற்காக அவ்வப்போது ஏதேனும் பரிகாரங்களை செய்து வந்துள்ளார்.
இந் நிலையில் சம்பவத்தன்று, குளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த ஆனந்த் யாதவ் திடீரென மயங்கி விழுந்துவிட்டதாக உறவினர்கள் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மூச்சுத்திணறல் காரணமாக இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து,சடலம் உடற்கூராய்வுக்கு அனுப்பப்பட்டது.
சடலத்தை உடற்கூராய்வு செய்தபோது ஆனந்த் யாதவ் மரணத்தில் திடுக்கிடும் திருப்பம் நிகழ்ந்தது. அவரது தொண்டையில் உயிருடன் ஒரு கோழிக்குஞ்சு சிக்கியிருப்பதை கண்டு அதை மீட்டனர்.
தொடர் விசாரணையில், மந்திர, தந்திரங்கள் மீது அதிகப்படியான நம்பிக்கை கொண்ட ஆனந்த் யாதவ், தந்தையாக வேண்டி சில சடங்குகளை செய்து வந்ததாக தெரிகிறது. அதன் ஒரு பகுதியாக உயிருடன் உள்ள கோழிக்குஞ்சை விழுங்கினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று உள்ளூரில் உள்ள ஜோசியர் ஒருவர் கூறியதை நம்பி இருக்கிறார்.
அதை உண்மை என்று நம்பிய அவர், கோழிக்குஞ்சு ஒன்றை உயிருடன் விழுங்கி உள்ளார். அப்போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். உடற்கூராய்வு செய்த மருத்துவர் சாந்து பாக் கூறியதாவது;
என் வாழ்நாள் பணி அனுபவத்தில் இதுபோன்றதொரு சம்பவத்தை நான் கண்டது இல்லை. உயிரிழந்த ஆனந்த் யாதவ் தொண்டையில் 20 செ.மீ., நீளம் கொண்ட கோழிக்குஞ்சை எடுத்தேன். இந்த கோழிக்குஞ்சு உயிருடன் இருக்கிறது.
தொண்டைக்குழியில் சிக்கிய கோழிக்குஞ்சால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரை இழந்துள்ளார். கிட்டத்தட்ட 15,000க்கும் மேற்பட்ட உடற்கூராய்வு செய்த நான் இதுபோன்ற ஒரு அனுபவத்தை கண்டதில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.