இனி இவர்களுக்கான ஓய்வூதியம் 10 ஆயிரத்தில் இருந்து ரூ.12,000 ஆக உயர்வு..!
சுதந்திரப் போராட்டத்திற்கு பாடுபட்ட தியாகிகளை கௌரவிக்கும் நிகழ்ச்சி புதுச்சேரி கம்பன் கலையரங்கில் நடைபெற்றது. செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் ரங்கசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தியாகிகளுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். தொடர்ந்து சிறுதானியங்கள் உணவு மற்றும் இனிப்புகள் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, “புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சட்டமன்றத்தில் பலமுறை தீர்மானங்கள் இயற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வலியுறுத்தி வருகிறோம். நம்பிக்கை வைத்தால் வெற்றி கிடைக்கும் என்று சொல்வார்கள் அந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே மாநில அந்தஸ்து வேண்டும் என்று தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வருகிறோம். மேலும் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைப்பது சம்பந்தமாக பிரதம் நரேந்திர மோடியை விரைவில் நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளேன்.
மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றுவதில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக புதுச்சேரி மாநிலம் திகழ்ந்து வருகிறது அதன் அடிப்படையில், புதுச்சேரியில் 1,348 தியாகிகளுக்கு தியாகிகளுக்கு மாதந்தோறும் பத்தாயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது அடுத்த மாதம் முதல் 12 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்” என தெரிவித்தார்.