கட்சி சரியாக இல்லை... வலுப்படுத்த நிறைய செய்யனும்: சசிகலா..!
எதிர்வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு அதிமுக முழு வேகத்தில் தயாராக வேண்டி இருக்கிறது. 2021 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு நடந்த ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக ஜெயிக்காதது பெரும் விமர்சனமாக பேசப்பட்டது. இந்த தேர்தலை விடுங்க.. அடுத்ததுல புடுச்சிடலாம் என எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் சமாதானம் சொல்லிக்கொண்டனர். ஆனால் அடுத்து வந்த நாடாளுமன்ற தேர்தலிலும் அதிமுக தோல்வியை தழுவியது. இந்த முறை, கட்சியின் வாங்கு வங்கி உயர்ந்திருக்கிறது என்று கட்சி தலைமை சமாதானம் சொல்லிக்கொண்டாலும், எடப்பாடி தலைமையில் ஒரு வெற்றியை கூட பெற முடியவில்லை என நிர்வாகிகள் அதிருப்தியில் இருக்கின்றனர். எனவே ஏற்கெனவே கட்சியிலிருந்து பிரிந்த சசிகலா, ஓபிஎஸ், தினகரன் உள்ளிட்டோரை உள்ளே கொண்டுவர வேண்டும் என்றும், இதன் மூலம் 2026 சட்டப்பேரவை தேர்தலை சிறப்பாக எதிர்கொள்ள முடியும் என்றும் மாஜி அமைச்சர்கள் பேசி வருவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் எடப்பாடி பழனிசாமி இந்த ஐடியாவை ஏற்றுக்கொள்ளவில்லை என்று சொல்லப்படுகிறது.
இன்றைய பிரஸ் மீட்டில் இது குறித்து தெளிவாக பேசிய எடப்பாடி, கட்சியிலிலிருந்து நீக்கப்பட்டவர்கள்.. நீக்கப்பட்டவர்களே. அவர்களை மீண்டும் இணைக்கும் பேச்சுகே இடமில்லை. அதிமுக பிளவுப்படவில்லை. இப்போது இருப்பதுதான் அதிமுக என்று கூறியிருந்தார். மட்டுமல்லாது நீக்கப்பட்டவர்களை இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக வெளியான தகவல்களையும் அவர் மறுத்திருக்கிறார். இப்படி முரண்டு பிடிப்பதன் மூலம் கட்சியின் வாக்குவங்கியை உயர்த்த முடியாது என்று, அதிமுகவின் இரண்டாம் கட்ட நிர்வாகிக்கள் கவலை தெரிவிக்கின்றனர். அவர்கள் இப்படி சொல்வதற்கு காரணம், தென் மாவட்டங்களில் ஓபிஎஸ்-க்கு உள்ள வாக்கு பலம்தான். டெல்டாவில் டிடிவிக்கு உள்ள செல்வாக்கும் சேர்ந்தால் அதிமுகவுக்கு பாசிட்டிவாக அமையும். ஆனால், இணைப்புக்கு இபிஎஸ்தான் பச்சை கொடி காட்ட வேண்டும்.
இப்படி இருக்கையில், அதிமுக சரியாக இல்லை என்று சசிகலா விமர்சித்துள்ளார். இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “அதிமுக சரியாக இல்லை. கட்சியை வலுப்படுத்த நிறைய செய்ய வேண்டியதாக இருக்கிறது. வலுப்படுத்தி 2026ல் மக்களாட்சி அமையும்” என்று கூறியுள்ளார்.