ஒரே விளம்பர சர்ச்சை.. தனிஷ்க் நிறுவன சந்தை மதிப்பு இத்தனை கோடி சரிவா ?

தனிஷ்க் நகைக்கடை நிறுவனம் அண்மையில் ஒருவிளம்பரத்தை ஒளிபரப்பு செய்தது. அதில், இஸ்லாம் குடும்பத்தினரால் அவர்களுடைய இந்து மருமகளுக்கு வளைகாப்பு நடத்துவது போல காண்பிக்கப்பட்டிருந்தது.
ஆனால், இந்து -இஸ்லாம் விவகாரத்தை கையில் எடுத்த சிலர் அந்த விளம்பரத்திற்கு கூட கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஒரு சில இடங்களில் தனிஷ்க் நகை கடை மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மேலும் அந்த விளம்பரத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து அந்த விளம்பரம் ஒளிபரப்பப்படுவது நிறுத்தப்பட்டது. மேலும், தனிஷ்க் நிறுவனம் இந்த சம்பவம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
இந்த சவாலான காலகட்டத்தில் பல்வேறு தரப்பு மக்கள், ஒரே சமூகமாக மற்றும் குடும்பமாக ஒன்றிணைவதை கொண்டாடுவதும், ஒற்றுமையின் அழகைக் கொண்டாடுவதும் தான் இந்த ஏகத்வம் விளம்பரத்தின் பின்னணியில் உள்ள யோசனை.
இந்த விளம்பரத்தின் நோக்கமே மாற்றப்பட்டு, மாறுபட்ட மற்றும் கடுமையான எதிர்வினைகளைத் தூண்டியுள்ளது.கவனக்குறைவின் பெயரில் இத்தகைய எதிர்வினைகள் எழுந்ததில் நாங்கள் வருத்தமடைந்துள்ளோம். மேலும் எங்கள் ஊழியர்கள், கூட்டாளர்கள் மற்றும் கடை ஊழியர்களின் புண்படுத்தும் உணர்வுகளையும் நல்வாழ்வையும் மனதில் கொண்டு இந்த விளம்பரத்தைத் திரும்பப் பெறுகிறோம் என்று தெரிவித்துள்ளனர்.
இந்த விளம்பரம் ஒளிபரப்பட்டு பின் நிறுத்தியப்பின்னரும் அந்நிறுவனத்திற்கும் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது அந்நிறுவனத்தின் மார்க்கெட் மதிப்பு ரூ.2 ஆயிரத்து 700 கோடி சரிவு அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
newstm.in