அடுத்தடுத்த சோகம்..! உயிரிழந்த மனைவியின் அஸ்தியை கரைக்க இந்தியா வந்த கணவன் விமான விபத்தில் பலி..!!

ஏர் இந்தியா விமான விபத்து உலகையே உலுக்கியது.இந்த விமானத்தில் 169 இந்தியர்கள், பிரிட்டனைச் சேர்ந்த 53 பேர், கனடாவைச் சேர்ந்த ஒருவர், போர்ச்சுகீசியத்தைச் சேர்ந்த 7 பேர், 2 விமானிகள், 10 பணியாளர்கள் உள்ளிட்ட 242 பேர் பயணித்தனர். இந்த விமான விபத்தில் சிக்கி குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உயிரிழந்தார். இந்த விமானத்தில் பயணித்தவர்களில் ஒருவரைத் தவிர வேறு யாரும் உயிர் பிழைக்கவில்லை.அகமதாபாத் விமான நிலையத்தில் 23வது ஓடுதளத்தில் இருந்து புறப்பட்டு மேலெழும்ப முடியாமல் தாழ்வாக பறந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள், உறவினர்களிடம் ஒப்படைக்கும் பணி தொடங்கியுள்ளது. நேற்று நடந்த கோர விபத்தில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், அவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி, உயிரிழந்தவர்களின் உறவினர்களிடம் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, DNA சோதனை மூலம் உடல்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றன. அந்த வகையில், அடையாளம் காணப்பட்ட உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், லண்டனில் இறந்த தனது மனைவியின் அஸ்தியை கரைக்க இந்தியா வந்த கணவன் அர்ஜூன் நேற்று (ஜூன் 12) நடந்த விமான விபத்தில் உயிரிழந்துள்ளார் என்பது விசாரணையில் வெளியாகியுள்ளது. மேலும் இவர்களுக்கு 8 மற்றும் 4 வயதில் இரு பெண் குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.