மக்களுக்கு அடுத்த ஷாக்..! இனி ஆண்டுக்கு 15 சிலிண்டருக்கு மேல் வாங்க முடியாதாம்..!

இந்தியாவில் பெரும்பாலான வீடுகளில் ஒரு மாதத்துக்கு ஒரு சிலிண்டர் என்ற வீதத்திலும், பல வீடுகளில் ஒரு மாதத்தில் இரண்டு சிலிண்டர்கள் வரை கூட உபயோகிக்கின்றனர். ஒரு மாதத்துக்கு ஒரு சிலிண்டர் என பார்த்தால் ஆண்டுக்கு 12 சிலிண்டர்களை பெரும்பாலான மக்கள் வாங்குகின்றனர்.
இந்நிலையில், ஆண்டுக்கு 15 சிலிண்டர்கள் பயன்படுத்தியவர்கள் அதற்கு மேல் சிலிண்டருக்கு பதிவு செய்யும் போது அன்புள்ள வாடிக்கையாளரே உங்கள் சமையல் கேஸ் சிலிண்டருக்கான பதிவை ஏற்க முடியாது. ஏனெனில், ஏற்கனவே ஆண்டு ஒதுக்கீட்டான 213 கிலோவை பயன்படுத்தி விட்டீர்கள் என இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் எஸ்எம்எஸ் தகவல் அனுப்பப்படுவதாக தகவல்கள் பரவி வருகின்றன.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் சொல்லும்போது, "ஒருவருக்கு ஆண்டுக்கு 15 சமையல் கேஸ் சிலிண்டர்கள் வரை வழங்கப்படும். அதில் 12 சிலிண்டர்களுக்கு மானியம் கிடைக்கும். எனவே அனுமதிக்கப்பட்ட கேஸ் சிலிண்டர் வரை மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். ஏனென்றால் அந்த சிலிண்டரை நுகர்வோர்கள் வீடுகளுக்கு தான் பயன்படுத்துகிறார்களா அல்லது முறைகேடாக பயன்படுத்துகிறார்களா என்பதை கண்டறியவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அதனால், 15 கியாஸ் சிலிண்டர் பயன்படுத்தியவர்கள் அதற்கு மேல் வாங்க வேண்டுமானால், அதற்கான காரணத்தை விளக்கி கேஸ் வினியோகம் செய்யும் நிறுவனத்திடம் கடிதம் கொடுக்க வேண்டும். அப்போதுதான், கூடுதல் சிலிண்டர் வழங்கப்படும்" என்றார்.
இதன்காரணமாக, ஒரு ஆண்டுக்கு 15 கேஸ் சிலிண்டர்களை பயன்படுத்தியவர்கள் அதற்கு மேல் கியாஸ் சிலிண்டர் வாங்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் குழப்பத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்த துவங்கிவிட்டது.. பொதுமக்கள் இதுகுறித்து கூறும்போது, "திடீரென, 15 சிலிண்டர்கள் பயன்படுத்தியவர்களுக்கு, அதற்கு மேல் பயன்படுத்த முடியாது என்று சொன்னால் எப்படி? ஒவ்வொரு முறை சிலிண்டர் வழங்கும்போதும், அது அந்த ஆண்டின் எத்தனையாவது சிலிண்டர் என்ற விவரத்தையும் கேட்டால் எப்படி? வருடத்துக்கு 12 சிலிண்டர்களுக்கு மானியம் வழங்கலாம். அதற்கு மேல் பயன்படுத்தும் சிலிண்டருக்கு மானியம் வழங்க வேண்டாம். ஆனால் 15 சிலிண்டர்கள் பயன்படுத்தியவர்கள் அதற்கு மேல் பயன்படுத்த முடியாது என்று சொல்வதால், பலர் பாதிக்கப்படலாம்..