மக்களுக்கு அடுத்த ஷாக்..! விரைவில் தக்காளி விலை 100 ரூபாய் தாண்ட வாய்ப்பு..!
தக்காளி விளைச்சலைப் பொறுத்தவரை ஒட்டன்சத்திரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் அதிகமாக விளைவிக்கப்படுகிறது. சாலைப்புதூர், பாவாயூர், கல்லுப்பட்டி, வளையப்பட்டி, காலஞ்சிப்பட்டி, இடையகோட்டை, அம்பிளிக்கை, கள்ளிமந்தயம், கப்பலாப்பட்டி, காவேரி அம்மாபட்டி, தங்கச்சி அம்மாபட்டி போன்ற பகுதிகளில் தக்காளி அதிகமாக விளைவிக்கப்படுகிறது. தற்போது மழை பெய்து வருவதன் காரணமாக தக்காளி அழுகியும் நோய் தாக்குதலுக்கு உள்ளாகி கரும் புள்ளிகளாக மாறிவிட்டது. இதை எடுத்து வேறு வழியில்லாமல் தக்காளியை அப்படியே பறித்து விவசாயிகள் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு அனுப்புகின்றனர். மார்க்கெட்டில் கழிவு தக்காளி தனியாக பிரிக்கப்பட்டு கொட்டி அழிக்கப்படுகிறது. 14 கிலோ கொண்ட தக்காளி பெட்டியில், நான்கு கிலோ முதல் ஐந்து கிலோ வரை தக்காளி கழிவுகள் உள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர். இதனால் விலையை அதிகரித்து விற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர்.
வழக்கமாக ஒட்டன்சத்திரம் சந்தைக்கு நாள் ஒன்றுக்கு 100 முதல் 110 லாரிகளில் தக்காளி வரும் நிலையில், தற்போது 60 முதல் 75 லாரிகள் மட்டுமே வருவதாக கூறப்படுகிறது. மேலும் மழை, பனி என மாறி மாறி வருவதால் தக்காளி பழங்கள் செடியிலேயே அழுகி விடுகின்றன. மேலும் பூச்சி தாக்குதலால் தக்காளி விளைச்சல் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது காய்கறி சந்தையில் தக்காளி விலை இருமடங்கு உயர்ந்துள்ளது. கடந்த வாரம் ஒரு பெட்டி (14 கிலோ) தக்காளி 250 ரூபாய் வரை விற்பனையான நிலையில் இன்று 580 ரூபாய் முதல் 610 ரூபாய் வரை ரகத்திற்கு ஏற்ற தரத்திற்கு ஏற்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வாரம் சில்லரை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி 30 ரூபாய் வரை விற்பனையான நிலையில் இன்று 45 ரூபாய் வரை விற்பனையாகிறது.
காய்கறி சந்தையில் இருந்து தக்காளியை வாங்கிச் சென்று கடைகளில் விற்பனை செய்யும் வியாபாரிகள் 55 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை விற்பனை செய்கின்றனர். இதன் காரணமாக விரைவில் தக்காளி விலை நூறு ரூபாயை தாண்டும் என கூறப்படுகிறது. இதே போல் கடந்த சில நாட்களாக சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயம் ஆகியவற்றின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
.png)