மக்களுக்கு அடுத்த ஷாக்..! இன்று முதல் பால் விலை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்வு..!
தமிழகத்தில் ஆவின் பால் மட்டும் இன்றி பல்வேறு தனியார் நிறுவனங்களின் பால் பாக்கெட்டுகளும் விற்பனையாகின்றன. 10 ரூபாய் பாக்கெட் முதல் அரை லிட்டர், ஒரு லிட்டர் என பல்வேறு கொள்ளளவுகளில் இந்த பாக்கெட் பால்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஆவின் பாலை போலவே தனியார் நிறுவனங்களின் பால் பாக்கெட்டுகளையும் மக்கள் அதிக அளவு வாங்குவதை காண முடிகிறது.
தனியார் பால் விற்பனையில் முன்னணி நிறுவனமாக இருக்க கூடிய ஆரோக்யா நிறுவனம் இன்று முதல் பால் விலையை உயர்த்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு லிட்டர் பாலின் விலை ரூ.65ல் இருந்து 67 ஆக உயர உள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு பால் முகவர் தொழிலாளர் நலச்சங்க தலைவர் பொன்னுசாமி, ஆரோக்யா நிறுவனம் பால் விலையை உயர்த்துவதாக சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. மூலப்பொருட்கள் விலை உயராத நிலையில், பால் விலை உயர்வை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார்.
பால் முகவர்களுக்கு சுற்றறிக்கை மூலம் இதை அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி நிறை கொழுப்பு பால் அரை லிட்டர் பாக்கெட் ரூ.36ல் இருந்து 37 ஆகவும், ஒரு லிட்டர் பாக்கெட் ரூ.65ல் இருந்து 67 ஆகவும், நிலைப்படுத்தபப்ட்ட பால் அரை லிட்டர் ரூ.31ல் இருந்து 32 ஆகவும், ஒரு லிட்டர் ரூ.58ல் இருந்து 60 ஆகவும், 400 கிராம் தயிர் பாக்கெட் ரூ.30 ல் இருந்து 32 ஆகவும், 500 கிராம் தயிர் ரூ.37ல் இருந்து 38 ஆகவும், 1 கிலோ தயிர் ரூ.66-ல் இருந்து 68 ஆகவும் உயர்த்துவதாக தெரிவித்துள்ளது.