மக்களுக்கு அடுத்த ஷாக்..! பால், தயிர் விலை மீண்டும் உயர்வு..!

தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியாவின் முன்னணி கூட்டுறவு பால் நிறுவனமான அமுல் நிறுவனம் கடந்த வாரம் பால் விற்பனை விலையை லிட்டருக்கு ஒரு ரூபாய் குறைத்திருக்கும் தருணத்தில் தமிழ்நாட்டில் சென்னையை தவிர்த்த பிற வெளி மாவட்டங்களில் பால் வணிகத்தில் ஈடுபட்டு வரும் சக்ரா, அர்ஜூனா உள்ளிட்ட பல முன்னணி தனியார் பால் நிறுவனங்கள் ஜனவரி மாதம் ஒவ்வொன்றாக பால் மற்றும் தயிர் விற்பனை விலையை உயர்த்தின.
இந்த நிலையில் வரும் பிப்ரவரி மாதம் 1ம் தேதி முதல் சென்னை முதல் தென் மாவட்டங்கள் வரை கிளை பரப்பியுள்ள அண்டை மாநிலமான ஆந்திராவைச் சேர்ந்த முன்னணி தனியார் பால் நிறுவனமான திருமலா பால் நிறுவனமும், பிப்ரவரி 3ம் தேதி முதல் ஜெர்சி பால் நிறுவனமும் பால் விற்பனை விலையை லிட்டருக்கு 2 ரூபாயும், தயிர் விற்பனை விலையை லிட்டருக்கு 5 ரூபாய் வரையிலும் உயர்த்துவதாக பால் முகவர்களுக்கு சுற்றறிக்கை மூலம் தகவல் தெரிவித்துள்ளது.
அதன்படி நிறைகொழுப்பு பால் (Full Cream Milk) ஒரு லிட்டர் பாக்கெட் 70 ரூபாயில் இருந்து 72 ரூபாயாகவும், 500 மி.லி பாக்கெட் 36 ரூபாயில் இருந்து 37 ரூபாயாகவும், நிலைப்படுத்தப்பட்ட பால் (Standardized Milk) ஒரு லிட்டர் பாக்கெட் 62 ரூபாயில் இருந்து 64 ரூபாயாகவும், 500 மி.லி பாக்கெட் 32 ரூபாயில் இருந்து 33 ரூபாயாகவும், சமன்படுத்தப்பட்ட பால் (Toned Milk) ஒரு லிட்டர் பாக்கெட் 61 ரூபாயில் இருந்து 62 ரூபாயாகவும், 500 மி.லி பால் பாக்கெட் 27 ரூபாயில் இருந்து 28 ரூபாயாகவும், சமன்படுத்தப்பட்ட தயிர் (Toned Curd) ஒரு கிலோ பாக்கெட் 70 ரூபாயில் இருந்து 72 ரூபாயாகவும், 450 கிராம் பாக்கெட் 36 ரூபாயில் இருந்து 37 ரூபாயாகவும், இருமுறை சமன்படுத்தப்பட்ட தயிர் (Double Toned Curd) ஒரு கிலோ பாக்கெட் 68 ரூபாயில் இருந்து 70 ரூபாயாகவும், 450 கிராம் பாக்கெட் 33 ரூபாயில் இருந்து 35 ரூபாயாகவும் விற்பனை விலை மாற்றத்தை திருமலா பால் நிறுவனம் அறிவித்துள்ளது.