மக்களுக்கு அடுத்த ஷாக்..! தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்..!

கடந்த 3 மாதங்களில் மட்டும், தங்கம் விலை சவரனுக்கு 10 ஆயிரம் ரூபாய் அதிகரித்துள்ளது. 2024-25 நிதி ஆண்டில் மட்டும் 35 சதவீகிதம் தங்கம் விலை உயர்ந்துள்ளது. நடப்பு நிதியாண்டில் அது ஒரு லட்சத்தை எட்டும் என்கின்றனர் தங்க விற்பனையாளர்கள்.
இவ்வாறு படிப்படியாக தங்கம் விலை அதிகரித்த வண்ணம் இருந்தது. கடந்த பிப்ரவரி மாதம் 1-ந்தேதி ஒரு சவரன் ரூ.62 ஆயிரத்தை தாண்டியது.
இந்த விலை உயர்வு குறைந்தபாடில்லை. கடந்த மாதம் (மார்ச்) 14-ந்தேதி ஒரே நாளில் 2 முறை ஏற்றம் கண்டு, 'கிடுகிடு'வென உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.66 ஆயிரத்து 400-க்கு விற்பனை ஆனது.
கடந்த 22-ந்தேதி ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 230-க்கும், ஒரு சவரன் ரூ.65 ஆயிரத்து 840-க் கும் விற்பனை செய்யப்பட்டது. அதன்பிறகு, தங்கம் விலை படிப்படியாக குறைய தொடங்கியது.
இந்த சூழலில், கடந்த 28-ந்தேதி தங்கம் விலை ரூ.66 ஆயிரத்தை தொட்டது. அன்றைய தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.8 ஆயிரத்து 340-க்கும், ஒரு பவுன் ரூ.66 ஆயிரத்து 720-க் கும் விற்பனை செய்யப்பட்டது. மறுநாளே, அதாவது கடந்த 29-ந்தேதி புதிய உச்சமாக ஒரு கிராம் தங்கம் ரூ.8 ஆயிரத்து 360-க்கும், சவரன் ரூ.66 ஆயிரத்து 880-க்கும் விற்பனை செய்யப்பட்டது. 30-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை தினம் என்பதால், தங்கம் விலையில் மாற்றம் ஏதுமின்றி விற்பனையானது.
இதனை தொடர்ந்து, தங்கம் விலை மீண்டும் நேற்று புதிய உச்சத்தை அடைந்துள்ளது. நேற்று, தங்கம் விலை ஒரு கிராம் ரூ.65-ம், சவரன் ரூ.520-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 425-க்கும், சவரன் ரூ.67 ஆயிரத்து 400-க்கும் விற்பனை செய்யப்பட்டு மீண்டும் இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்தை தொட்டு இருக்கிறது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் தேவை அதிகரித்து காணப்படுவதால், தங்கம் விலை உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் மாத தொடக்க நாளான இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. தங்கம் கிராமுக்கு 60 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,510-க்கும் சவரனுக்கு 480 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.68,080-க்கும் விற்பனையானது.
தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 114 ரூபாய்க்கும், கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ரூ.1,14,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.